விதிமுறை மீறி குடிநீர் உறிஞ்சுவோரை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு


விதிமுறை மீறி குடிநீர் உறிஞ்சுவோரை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2020 3:29 AM GMT (Updated: 2 Dec 2020 3:29 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே விதிமுறை மீறி குடிநீர் உறிஞ்சுவோரை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 20 மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ராவுத்தர்ராயன் குப்பம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி சிலர் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை பொருத்தி குடிநீரை உறிஞ்சுகிறார்கள். இதனால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்லவில்லை. குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்த பொதுமக்கள், இது குறித்து புகார் தெரிவித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்றும் மேடான பகுதிகளுக்கு குடிநீர் செல்லவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலி குடங்களுடன் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

20 மின்மோட்டார்கள் பறிமுதல்

அப்போது குடிநீர் குழாயில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள வீடுகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 20 வீடுகளில் விதிமுறைகளை மீறி மின்மோட்டார் பொருத்தி குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இதையடுத்து 20 வீடுகளில் இருந்த மின்மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் வீட்டு உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story