பா.ம.க. போராட்டம் அறிவிப்பு: முன்னெச்சரிக்கையாக 254 பேர் கைது போலீசை கண்டித்து சாலை மறியல்


பா.ம.க. போராட்டம் அறிவிப்பு: முன்னெச்சரிக்கையாக 254 பேர் கைது போலீசை கண்டித்து சாலை மறியல்
x
தினத்தந்தி 2 Dec 2020 4:20 AM GMT (Updated: 2 Dec 2020 4:20 AM GMT)

வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி சென்னையில் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் பா.ம.க.வினர் 254 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் விருத்தாசலத்தில் போலீசை கண்டித்து பா.ம.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர்,

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பா.ம.க. சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி முதற்கட்ட போராட்டம் நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பா.ம.க.வினர், வன்னியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் இரவு வாகனங்களில் சென்னைக்கு புறப்பட்டனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களை இரவோடு இரவாக போலீசார் ஆங்காங்கே தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

முன்னெச்சரிக்கை

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் திருப்பாதிரிப்புலியூர், அரியகோஷ்டி, புதுப்பேட்டை, நஞ்சலூர், சிதம்பரம், ஆலடி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, மங்களூர், வடலூர், நெய்வேலி, விருத்தாசலம், கீரப்பாளையம், புவனகிரி, வீரசிங்கன்குப்பம், கம்மாபுரம் உள்ளிட்ட பகுதியில் இருந்து போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு செல்ல முயன்ற பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் 212 பேரை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர்.

இதேபோல் நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியில் இருந்து வேன்களில் கடலூர் வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்த பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினரை கடலூர் அண்ணாபாலம் அருகில் போலீசார் மறித்தனர். பின்னர் அந்த வேன்களில் இருந்த 27 பேரை போலீசார் கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

மேலும் சீர்காழியில் இருந்து சிதம்பரம் வழியாக வாகனத்தில் செல்ல முயன்ற 6 பேரை சிதம்பரம் வண்டிகேட் பகுதியிலும், திருவாரூரில் இருந்து விருத்தாசலம் வழியாக செல்ல முயன்ற 9 பேரை பாலக்கரை அருகிலும் போலீசார் மறித்து கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்னைக்கு செல்ல முயன்ற பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட சம்பவம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாலை மறியல்

இதற்கிடையே மாவட்டத்தில் பா.ம.க.வினர் மீது கைது நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸ்காரர்களை கண்டித்து, விருத்தாசலத்தில் கடலூர் மாவட்ட பசுமை தாயக அமைப்பாளர் ஆசா.வெங்கடேசன் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் சேது சுரேஷ், நகர துணை செயலாளர் சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் சீனு, நகர அமைப்பு செயலாளர் செந்தில்குமார், அருள், பாலா, ஒன்றிய செயலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story