50 ஆண்டு கோரிக்கையான மருத்துவக்கல்லூரியை திருப்பூருக்கு வழங்கியது அ.தி.மு.க. அரசு பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு


50 ஆண்டு கோரிக்கையான மருத்துவக்கல்லூரியை திருப்பூருக்கு வழங்கியது அ.தி.மு.க. அரசு பொள்ளாச்சி ஜெயராமன் பேச்சு
x
தினத்தந்தி 2 Dec 2020 5:05 AM GMT (Updated: 2 Dec 2020 5:05 AM GMT)

திருப்பூர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான மருத்துவக்கல்லூரியை வழங்கியது அ.தி.மு.க. அரசு என்று மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.

அனுப்பர்பாளையம்,

அ.தி.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து வார்டுகளுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் நேரடி ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி திருப்பூர் வடக்கு தொகுதி நெருப்பெரிச்சல் பகுதிக்குட்பட்ட 28, 29, 30 வார்டுகளில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் 29-வது வார்டுக்குட்பட்ட பிச்சம்பாளையத்தில் மாநகர் மாவட்ட செயலாளருக்கு மேள, தாளம் முழங்க வரவேற்பு அளித்து ஆள்உயர மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் நடந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், சு.குணசேகரன், மாநில அமைப்பு செயலாளர் சி.சிவசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். முன்னாள் கவுன்சிலரும், 29-வது வட்ட செயலாளருமான கனகராஜ் வரவேற்றார்.

மருத்துவக்கல்லூரி

கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:-

திருப்பூர் மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கையான மருத்துவக்கல்லூரியை வழங்கியது அ.தி.மு.க. அரசு ஆகும். குடிநீர் தட்டுப்பாட்டை முற்றிலும் தீர்க்கும் வகையில் விரைவில் 4-வது குடிநீர் திட்ட பணிகள் நிறைவு பெற்று திருப்பூர் மக்களுக்கு குடிநீர் வந்தடையும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர வேண்டுமென்றால் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 430 அரசு பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் செலவிலேயே மருத்துவ கல்லூரியில் படிக்க உள்ளனர் என்றால் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத சாதனையாக உள்ளது. திருப்பூர் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகை

இதில் முன்னாள் எம்.எல்.ஏ.பழனிச்சாமி, முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், பகுதி செயலாளர்கள் பட்டுலிங்கம், கருணாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் கனகராஜ், விஜயகுமார், ரங்கசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகள் பூலுவப்பட்டி பாலு, நீதிராஜன், சதீஷ், கேபிள் விஜய், தண்ணீர்பந்தல் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜெய்வாய்பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவ சீட் பெற்றுள்ள பிச்சம்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகளான மாணவி நந்தினிக்கு கல்வி ஊக்கத்தொகை ரூ.10 ஆயிரத்தை முன்னாள் கவுன்சிலர் கனகராஜ் வழங்கினார்.

Next Story