திருப்பூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 43 பேர் கைது


திருப்பூர் தலைமை தபால் நிலையம் முற்றுகை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 43 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2020 10:37 AM IST (Updated: 2 Dec 2020 10:37 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருப்பூரில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் 43 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்,

வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் திருப்பூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தொடர் முற்றுகை போராட்டம் நேற்று காலை திருப்பூர் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உன்னிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் காமராஜ், மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் தலைமை தபால் நிலைய வளாகத்துக்குள் நுழைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருப்பூர் வடக்கு போலீசார் அவர்களை தடுத்தனர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு நுழைவு வாசல் முன்பு தரையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 43 பேரை திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

அவினாசி

இதுபோல் அவினாசி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கட்சி அலுவலகத்திலிருந்து ஏர்கலப்பையுடன் சென்று அவினாசி தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர், மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் முத்துசாமி, சி.ஐ.டி.யு மாவட்ட துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, துணைசெயலாளர் வெங்கடாசலம், விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்துரத்தினம் உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் கலந்துகொண்டனர்.

ஊத்துக்குளி

இதே கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஊத்துக்குளி தாலுகா குழு சார்பில் நேற்று ஊத்துக்குளி ஆர்.எஸ். பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் சிவசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கொளந்தசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் மணியன், சி.ஐ.டி.யு மாவட்ட குழு உறுப்பினர்கள் பழனிசாமி, கண்ணையன், கட்டிட தொழிலாளர் சங்க செயலாளர் மகேந்திரன், தலைவர் பன்னீர்செல்வம், பெரியசாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

Next Story