தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2020 5:49 AM GMT (Updated: 2 Dec 2020 5:49 AM GMT)

மீனவர்களின் உயிரிழப்பு வேதனை தருகிறது என்றும், தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்றும் முதல்- அமைச்சரை நேரில் சந்தித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

கருங்கல்,

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை, காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் நேற்று சென்னையில் முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

அப்போது அவர், தேங்காப்பட்டணம் துறைமுகம் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்றும், இதனால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது வேதனை தருகிறது என்றும் கவலை தெரிவித்தார். மேலும் துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்வதுதான் உயிரிழப்பை தடுப்பதற்கான நிரந்தர தீர்வு என்றும், அப்படி மறு கட்டமைப்பு செய்யப்படும் போது மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அப்போது பிரின்ஸ் எம்.எல்.ஏ. உடன் இருந்தார்.

கோரிக்கை மனு

தொடர்ந்து முதல்- அமைச்சரிடம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தேங்காப்பட்டணத்தில் விசைப்படகு, வள்ளம், பைபர் வள்ளம், நாட்டுப்படகு, கட்டுமரம் போன்றவற்றில் சென்று மீனவர்கள், மீன்பிடி தொழில் செய்யவும், மேற்கூறிய படகு, வள்ளங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், சுகாதாரமான சூழலில் மீன்பிடி தொழில் செய்யவும் ரூ.97 கோடியில் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. சரியான கட்டமைப்புடன் துறைமுகம் அமைக்கப்படாததால் தொடர்ச்சியாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்த துறைமுகத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒரு நிறுவனம் ஆய்வு செய்து ரூ.77 கோடி ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பி உள்ளது. அதன்படி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், துறைமுகத்தை மறு கட்டமைப்பு செய்யும் போது மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைகளை கேட்க வேண்டும். நீரோடித்துறை முதல் தேங்காப்பட்டணம், மண்டைக்காடு புதூர் வரையுள்ள ஏ.வி.எம்.கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும்.

மினி கிளினிக்

கிள்ளியூர், குளச்சல் சட்டமன்ற தொகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத இடங்களில் ‘மினிகிளினிக்’ அமைக்க வேண்டும். கணபதியான் கடவு- விரிவிளை சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கடல் அரிப்பால் துண்டிக்கப்பட்ட வள்ளவிளை- எடப்பாடு- இரவிபுத்தன்துறை சாலை மற்றும் தேங்காப்பட்டணம்- அரையன்தோப்பு- முள்ளூர்துறை சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

கிள்ளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி தாலுகா ஆஸ்பத்திரியாக அறிவிக்க வேண்டும். குளச்சல் அரசு ஆஸ்பத்திரியை உயர்தர ஆஸ்பத்திரியாக மாற்ற வேண்டும்.

தீயணைப்பு நிலையம்

கருங்கல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் சேதமடைந்த தூண்டில் வளைவுகள் மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர்களை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Next Story