திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை


திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி பண பரிவர்த்தனை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2020 7:11 AM IST (Updated: 3 Dec 2020 7:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.ஐ.டி. பெயரில் போலி வங்கிக்கணக்கு தொடங்கி, வேலை வாங்கி தருவதாக கூறி அந்த கணக்கில் பணம் பெற்று மோசடி நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவெறும்பூர்,

திருச்சி திருவெறும்பூர் அருகே மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தொழில்நுட்ப கல்வி நிறுவனமான என்.ஐ.டி. உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மாணவ- மாணவிகள் தொழில்நுட்பக் கல்வி படித்து வருகின்றனர்.

மேலும் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்கள் என்று ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். காவலாளி பணிக்கு நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

போலி வங்கிக்கணக்கு தொடக்கம்

இந்தநிலையில் திருச்சி என்.ஐ.டி.யில் காவலாளி வேலை வாங்கித் தருவதாக கூறி என்.ஐ.டி. பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலியான வங்கி கணக்கு தொடங்கி அதில் பணம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் மின்னஞ்சலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி அறிந்த திருச்சி என்.ஐ.டி. பதிவாளர் சின்ரில்லா, துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்திமதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்.ஐ.டி. பெயரில் வங்கி கணக்கை தொடங்கியது யார்? என்று விசாரணை செய்து வருகிறார்.

இந்த மோசடியில் ஈடுபட்ட நபரை பிடித்த பிறகுதான் எவ்வளவு பணம் மோசடி நடந்துள்ளது, எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? இதுதான் முதல் முறையா? அல்லது இதுபோல் வேறு பதவிகளுக்கு ஆள்சேர்க்க பணம் பெற்று முறைகேடு நடந்ததா? என்பது தெரியவரும்.

Next Story