வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள்- ரூ.40 ஆயிரம் கொள்ளை


வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள்- ரூ.40 ஆயிரம் கொள்ளை
x
தினத்தந்தி 3 Dec 2020 2:58 AM GMT (Updated: 3 Dec 2020 2:58 AM GMT)

வேதாரண்யம் அருகே 2 வீடுகளின் கதவை உடைத்து 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை செங்காதலை சாலையில் வசிப்பவர் சுபேதாபேகம் (வயது32). சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு பக்கத்து வீட்டில் இருந்துள்ளார். பின்னர் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைத்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதேபோல் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை இலந்தையடியை சேர்ந்தவர் ரஸ்தா அப்துல் கபூர் (70). இவர் வீட்டை பூட்டி விட்டு மருத்துவ சிகிச்சைக்காக வெளியூர் சென்று தங்கி இருந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று ரஸ்தா அப்துல் கபூரின் உறவினர் வீட்டை வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து சுபேதாபேகம், ரஸ்தா அப்துல் கபூர் ஆகியோர் தனி தனியாக வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாகையில் இருந்து மோப்பநாய் துலிப் வரவழைக்கப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story