அவினாசி அருகே தொழில் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


அவினாசி அருகே தொழில் பூங்கா அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2020 4:39 AM GMT (Updated: 3 Dec 2020 4:39 AM GMT)

அவினாசி அருகே தொழில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அவினாசி,

அவினாசி அருகே தந்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 850 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைப்பதற்காக வருவாய் துறையினர் இடங்களை ஆய்வு செய்தனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இதையடுத்து புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார், தத்தனூர் ஆகிய பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அவினாசியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்தனர்.

இது பற்றிய தகவலறிந்ததும் அவினாசி தாசில்தார் ஜெகநாதன், ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், போலீஸ் துணை போலீஸ் பாஸ்கர், இன்ஸ்பெக்டர் அருள் மற்றும் போலீசார் அங்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கிராம மக்கள் கோரிக்கை மனுவை ஒன்றிய குழு தலைவரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியதாவது:-

விவசாயம் அழியும்

அவினாசி வட்டம் புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் உள்ளிட்ட ஊராட்சி பகுதியில் 4 ஆயிரம் பொதுமக்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் விவசாயம், மற்றும் விவசாயம்சார்ந்த கால்நடை வளர்த்தல், ஆடு, கோழி வளர்த்தல், பால் உற்பத்தி, விவசாய கூலி ஆகிய தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் எங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தை அடியோடு அழிக்கும் விதமாக தொழிற்பூங்கா அமைப்பதற்கு நிர்வாக அனுமதி பெற பல்வேறு வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

அத்திக்கடவு - அவினாசி திட்டப் பணிகள் விரைவில் முடிவடைந்து விடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் சமீபத்திய தொழில் பூங்கா அமைக்க இடம் ஆய்வு செய்யப்பட்டது பேரிடியாக உள்ளது. சிறு, குறு விவசாயிகள் இந்த பூமியை நம்பித்தான் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் தொழில் பூங்கா அமைத்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நாங்கள் வீடு, வாசல் இன்றி அகதிகளாக வெளியேற வேண்டிய அவலம் ஏற்படும். எனவே எங்களின் விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி ஷிப்காட் நிறுவனத்திற்கு கொடுப்பதை நாங்கள் கடுமையாக ஆட்சேபிக்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உரிய நடவடிக்கை

பொதுமக்களிடமிகுந்து மனுவை பெற்றுக் கொண்ட ஒன்றிய குழு தலைவர் கூறும்போது “ சட்டமன்ற சபாநாயகர் தற்போது சென்னையில் உள்ளார். அடுத்த வாரம் அவர் இங்கு வர உள்ளார். அப்போது அவரிடம் உங்களது கோரிக்கையை எடுத்து சொல்லி அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சபாநாயகரிடம் நானும் வருவாய் துறையினமும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பொது மக்களின் நலன் கருதி சுமுகமான முடிவு மேற்கொள்வதாக உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story