அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை


அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக தொடர் மழை
x
தினத்தந்தி 3 Dec 2020 10:49 PM GMT (Updated: 3 Dec 2020 10:49 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக தொடர்ந்து மழை பெய்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மழை பெய்தது. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. நேற்று காலை 6 மணி வரை 35 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் அரியலூர் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுக்கு பின் திறக்கப்பட்ட அரசு கலைக்கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகள் சிரமப்பட்டனர். கடைவீதிகள் வெறிச்சோடின.

25 சதவீத கடைகள் திறக்கப்படவில்லை. பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. கடந்த மாதம் 25-ந் தேதி முதல் மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருவதால் 200-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து உள்ளது. ஆனால் அவை முழுமையாக நிரம்பவில்லை.

ஜெயங்கொண்டம்

இதேபோல் ஜெயங்கொண்டம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை காற்றுடன் கூடிய மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால் பெரும்பாலான மக்கள் வெளியில் செல்லாமல் தங்கள் வீடுகளிலேயே இருந்தனர். அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வீட்டிற்கு ஒருவர் என குடை பிடித்தபடி வெளியே வந்து சென்றனர். மாலையில் பலத்த மழை பெய்தது.

தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இரவு முதல் விடிய, விடிய லேசான முதல் பரவலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகள் மற்றும் மண் சுவர்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு, மழை வெள்ளம் வந்து விடுமோ? என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர்வரத்து வாய்க்கால்களில் நீர் நிரம்பி ஏரிகளில் கலப்பதால், விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் தற்போது கடலை விதைக்கும் நேரத்தில் இந்த மழை பெய்வதால் விவசாயிகள் கடலை பயிரிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஜெயங்கொண்டம் பகுதியில் சீதோஷண நிலை மாறியுள்ளதால் முதியவர்கள் குளிரால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆண்டிமடத்தை அடுத்துள்ள சிலம்பூர் கிராமத்தில் நடுத்தெருவில் விநாயகர் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணர் சன்னதியின் முன்பகுதியில் மழை நீர் சேர்ந்து குளம் போல் காட்சியளித்தது. இதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு கோவிலுக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

உடையார்பாளையத்தை சுற்றி உள்ள அனைத்துக் கிராமங்களிலும் உள்ள ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பின. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

மழை அளவு

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

அரியலூர்-26, திருமானூர்-57.6, ஜெயங்கொண்டம்-28, செந்துறை-50.

இதே போல் மாவட்டத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

அரியலூர்-51, திருமானூர்-84.8, ஜெயங்கொண்டம்-30, செந்துறை-55 ஆகும்.

Next Story