காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்ற 3 சிறுமிகள் மாயம்


காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்ற 3 சிறுமிகள் மாயம்
x
தினத்தந்தி 4 Dec 2020 7:28 AM IST (Updated: 4 Dec 2020 7:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே பாலாற்றை கடக்க முயன்ற 3 சிறுமிகள் மாயமானார்கள்.

குளிக்க சென்றனர்
காஞ்சீபுரம் தும்பவனம், வெள்ளை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தாமோதரன். இவரது அக்காள் மகள் பூரணி (17), அவர் தனது தோழிகளான அதே பகுதியை சேர்ந்த சகோதரிகளான ஜெயஸ்ரீ (15), சுபஸ்ரீ (14) மற்றும் மீனாட்சி (9) ஆகியோருடன் காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் குளிக்க சென்றனர்.

குளித்து முடித்தபிறகு தாமோதரன் மீனாட்சியை அழைத்து கொண்டு பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார். பூரணி, ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ ஆகியோர் பாலாற்றை நடந்து கடக்க முயன்றனர்.

மாயம்
தாமோதரன் திரும்பி பார்த்தபோது சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு மாயமானார்கள்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மைனர்சாமி, மாகரல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிஷோர் குமார் மற்றும் காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அங்கு விரைந்து சென்று மாயமான 3 சிறுமிகளை தேடி வருகின்றனர்.

Next Story