அவினாசி அருகே தொழில் பூங்கா வேண்டாம் 3 ஊராட்சி மன்றங்களில் தீர்மானம்


அவினாசி அருகே தொழில் பூங்கா வேண்டாம் 3 ஊராட்சி மன்றங்களில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Dec 2020 6:32 AM GMT (Updated: 4 Dec 2020 6:32 AM GMT)

அவினாசி அருகே தொழில் பூங்கா வேண்டாம் என்று 3 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேவூர்,

சேவூர் அருகே தத்தனூர், புலிப்பார் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி பகுதியில் 846 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் (தொழில் பூங்கா) அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பூர்வாங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆனால் தொழில் பூங்கா அமைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக ஆனைக்கல்பாளையத்தில் உள்ள அடி பெருமாள் கோவிலில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சிகளில் தீர்மானமாக நிறைவேற்ற வலியுறுத்துவதோடு, மாவட்ட கலெக்டரிடம் திரளாக சென்று கோரிக்கை வைப்பது என முடிவு செய்தனர். அதை தொடர்ந்து நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவினாசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை

இந்த நிலையில் ஊராட்சி சார்பில் தொழில் பூங்கா அமைக்க எதிரான தீர்மானம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட முடிவு செய்தனர். அதன்படி தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 200 பேர் அடி பெருமாள் கோவிலில் இருந்து கொட்டும் மழையில் நடைபயணமாக புறப்பட்டு தத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ஊராட்சி தலைவர் விஜயகுமாரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ஊராட்சி தலைவர் பேசும்போது, “ இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கும் வகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, நாளை (இன்று) ஊராட்சி மன்ற கூட்டத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தார். ஆனால் இதற்கு பொது மக்கள் இப்போதே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஊராட்சி அலுவலகத்திற்கு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

தீர்மானம்

இதை தொடர்ந்து நேற்று பகல் 1 மணிக்கு தத்தனூர் ஊராட்சியில் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் தத்தனூர் ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் தொழில் பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கொடுத்த சிப்காட் தொழில் பூங்கா வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மாலை 4 மணிக்கு புலிப்பார் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இதை தொடர்ந்து புலிப்பார் ஊராட்சியிலும் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து ஊராட்சி மன்ற அவசரக்கூட்டம் நடைபெற்று பொது மக்களின் கோரிக்கைக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்கள் திரண்டு வந்து மூன்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story