2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது; துணை பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி. பேட்டி
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அந்தியூர் செல்வராஜ் எம்.பி. ராசிபுரம் வந்திருந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- விவசாயிகள் போராட்டம் டெல்லியில் எந்தளவு நடந்து கொண்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களை கார்பரேட் கம்பெனிகள் வாங்கி, ஸ்டாக் வைத்து விலை ஏறும் நேரத்தில் விற்பார்கள். சந்தையில் பொருட்கள் கிடைக்காமல் விலையேற்றத்துக்கு இது வழிவகுக்கும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவர். இன்று மத்திய அரசு செய்கின்ற அனைத்து திட்டங்களையும் தமிழக அரசு கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. விவசாயி என்று சொல்லிக்கொள்ளும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை ஆதரிக்கிறார்.
அரசியலில் வாரிசு என்பது எல்லா கட்சிகளிலும் இருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அரசியல், சினிமா இரண்டிலும் உள்ளார். தி.மு.க.வில் உழைப்புதான் முக்கியம். ஜாதி, மதத்தை பார்ப்பதில்லை. உழைப்பு இருந்தால் ஒருவருக்கு பதவி கிடைக்கிறது. இளைஞர்கள் மத்தியில் தி.மு.க.வுக்கு எழுச்சி உள்ளது.
ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக சொல்லியுள்ளார். அவருக்கு 1996-ல் இருந்த ஆதரவு வேறு, தற்போது 2020-ல் உள்ள நிலை வேறு. அவரிடம் நிலையான நிலைப்பாடு இல்லை. அவர் விஷயத்தில் அ.தி.மு.க.வின் நிலை வேறு. தி.மு.க.வின் நிலை வேறு. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உடனிருந்தார். மாவட்ட பொருளாளர் வக்கீல் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.துரைசாமி, கே.பி.ஜெகநாதன், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜேஸ்பாபு, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.கே.பாலச்சந்திரன், ராசிபுரம் ஒன்றிய துணை செயலாளர் சிவக்குமார், ஒன்றிய பொருளாளர் ரவி உள்பட கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து சால்வை அணிவித்தனர்.
அதன்பிறகு ராசிபுரத்தில் உள்ள அண்ணாசிலைக்கு அந்தியூர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிகளில் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர், மாவட்ட பிரதிநிதி கல்யாணி அரங்கசாமி, முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.பாலு, முன்னாள் கவுன்சிலர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story