அரியலூர், பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


அரியலூர், பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2020 4:15 AM IST (Updated: 6 Dec 2020 4:15 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர், பெரம்பலூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்,

மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு கருப்பு கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன் தலைமை தாங்கி கண்டனம் தெரிவித்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3 வேளாண்மை சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டும், கையில் கருப்பு கொடியேந்தியும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

அரியலூரில்...

இதேபோல் அரியலூரில் அண்ணா சிலை அருகே மாவட்ட தி.மு.க. சார்பில், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், ‘நிவர்‘, ‘புரெவி‘ புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து, கையில் கருப்பு கொடி ஏந்தி கலந்து கொண்டனர்.
1 More update

Next Story