“மு.க.ஸ்டாலின் போராட்ட நாடகம் விவசாயிகளிடம் எடுபடாது” - ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டி


ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது
x
ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியபோது
தினத்தந்தி 6 Dec 2020 7:07 AM IST (Updated: 6 Dec 2020 7:07 AM IST)
t-max-icont-min-icon

மு.க.ஸ்டாலின் போராட்ட நாடகம் விவசாயிகளிடம் எடுபடாது என்று ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

ஜெயலலிதா நினைவுநாள்
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நேற்று திருப்பரங்குன்றத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி 16 கால் மண்டபம் வளாகத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், துணைச் செயலாளர் முத்துக்குமார், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மீனவரணி மாவட்ட துணை செயலாளர் மணிபாண்டி, பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட செயலாளர் பொன்முருகன், துணை செயலாளர், செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் கருத்தக்கண்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாக்கிலிப்பட்டி பாலமுருகன், வட்ட செயலாளர் திருநகர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்ட நாடகம்

முன்னதாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறது. வேளாண் மசோதா சட்டத்தில் விவசாயிகளுக்கு குறை இருந்தால் சொல்லுங்கள் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கேட்டிருந்தார். ஆனால் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராட்டம் செய்கிறார். 

அவருடைய போராட்டம் என்றைக்கும் வெற்றி பெற்றதில்லை. தமிழகத்தில் ஆட்சியை குறை சொல்ல முடியாததால் டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கூறி தமிழகத்தில் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. அவரது நாடகம் விவசாயிகளிடம் எடுபடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story