துபாயில் இருந்து சென்னைக்கு முதுகில் மறைத்து வைத்து ரூ.15 லட்சம் தங்கம் கடத்தல்; 3 பேரிடம் விசாரணை
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
துபாய் விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது அந்த விமானத்தில் இருந்து சந்தேகப்படும்படியாக வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அனஸ் (வயது 27), சென்னையை சேர்ந்த ஜும்மாகான் (47), முகமது ரபி (46) ஆகிய 3 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அவர்களது உடைமைகளில் எதுவும் இல்லாததால் 3 பேரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.
ரூ.15 லட்சம் தங்கம்
அதில் 2 பேரின் முதுகிலும் சற்று வீங்கி இருந்தது. அது என்ன? என்று கேட்டதற்கு முதுகில் சுளுக்கு பிடித்து இருப்பதாகவும், அதற்காக பேண்டேஜ் வைத்து இருப்பதாகவும் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், பேண்டேஜை பிரித்து பார்த்தனர்.
அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மற்றொருவர் பேண்ட்டில் மறைத்து கடத்தியதும் தெரிந்தது. 3 பேரிடம் இருந்தும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story