யார் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க.விற்கு பாதகம் கிடையாது; இல.கணேசன் பேட்டி
யார் கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க.விற்கு பாதகம் கிடையாது என இல.கணேசன் கூறினார்.
திருச்செந்தூரில் நடைபெறும் வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் மதுரை விமான நிலையம் வந்தார். இதைதொடர்ந்து விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இல.கணேசன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பேட்டி
அர்ஜுனமூர்த்தி புதிதாக பா.ஜ.க.வில் இணைந்தவர். அவருக்கு ஒரு பொறுப்பு தந்திருந்தோம். அவர் தற்போது ரஜினிகாந்திடம் சேர்ந்து இருக்கிறார். அதனால் எங்களுக்கு எந்த ஒரு இழப்பும் இல்லை.
ரஜினிகாந்த், ஜனவரியில் கட்சி ஆரம்பிப்பதாக கூறுகிறார். குழந்தை பிறந்த பிறகுதான் என்ன பெயர் வைக்க வேண்டும் என யோசிக்க வேண்டும்.
யார் எந்த கட்சி ஆரம்பித்தாலும் பா.ஜ.க.விற்கு பாதகம் கிடையாது, மோடியின் நல்லாட்சி மீது நம்பிக்கை வைத்து இணைந்தால் வரவேற்போம். பா.ஜ.க.வின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் எந்த மாற்றமும் வராது என்றால் எதிர்க்கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும். ஏன் யாத்திரை தொடங்கியதிலிருந்து தினந்தோறும் வேல் யாத்திரை குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன.
இதனால் அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. எதிர்க்கட்சிகளுக்கு பாதிப்பு இருக்கிறதோ, இல்லையோ பா.ஜனதாவிற்கு செல்வாக்கு கூடியிருக்கிறது.
தீர்வை எட்டுவோம்
டெல்லியில் நடைபெறுவது விவசாயிகளின் போராட்டம் அல்ல, விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நடுவில் உள்ளவர்கள் நடத்தி வருகின்றனர். செலவு செய்து ஆட்களை கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார்கள், அதிலும் கூட சில சமூக விரோதிகள் உள்ளே புகுந்து இருக்கிறார்கள். விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதால் தான் சமாதானம் பேச முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். வருகிற 9-ந்தேதி விவசாயிகளை சந்திக்க உள்ளோம், அவர்களுக்கு புரிய வைத்து நல்லபடியாக தீர்வை எட்டுவோம். நிச்சயமாக வேளாண் திருத்த சட்டத்தை மாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடையாது,
நிறைவேற்றியது நிறைவேற்றியது தான் விவசாயிகளுக்கு அதை புரிய வைப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபோல் அதே நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான குஷ்பு அதே விமானத்தில் மதுரை வந்தடைந்தார்.
Related Tags :
Next Story