5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் வல்லூர் அணைக்கட்டில் பெருக்கெடுத்து ஓடும் கொசஸ்தலை ஆற்று வெள்ளம்; நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு


வல்லூர் அணைக்கட்டில் கொசஸ்தலை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை படத்தில் காணலாம்
x
வல்லூர் அணைக்கட்டில் கொசஸ்தலை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சியை படத்தில் காணலாம்
தினத்தந்தி 8 Dec 2020 4:26 AM IST (Updated: 8 Dec 2020 4:26 AM IST)
t-max-icont-min-icon

மீஞ்சூர் அருகே 5 ஆண்டுகளாக வறண்டு கிடந்த கொசஸ்தலை ஆறு, தற்போது வல்லூர் அணைக் கட்டு வழியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கொசஸ்தலை ஆறு வற்றியது
மீஞ்சூர் அருகே சீமாபுரம் கிராமத்தின் வழியாக கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே வல்லூர் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டு மூலம் வெளியேறும் நீரின் மூலம் 4 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு பிறகு ஆறு வறண்டு கிடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், இப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யாததால் இந்த ஆறு தண்ணீர் இல்லாமல் வற்றியது.

‘நிவர்’ புயல் காரணமாக ஆந்திராவில் மழை வெள்ளத்தால் கேசவரம் அணைக்கட்டிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரால் பூண்டி ஏரி நிரம்பிய பின்னர், உபரிநீர் கடந்த மாதம் 28-ந்தேதி கொசஸ்தலை ஆற்றில் ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.

வல்லூர் அணைக்கட்டில் வெள்ளம்
இந்த நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு, திருகண்டலம், இருளிப்பட்டு, ஜெகநாதபுரம் மற்றும் வன்னிப்பாக்கம் தடுப்பணைகள் கடந்து நேற்று முன்தினம் வல்லூர் அணைக்கட்டுக்கு வந்தடைந்தது. மேலும் 
தொடர் மழை பெய்து வருவதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் ஆற்றில் தேங்கியுள்ள வெள்ள நீரால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்று நம்பி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், வல்லூர் அணைக்கட்டில் 3 அடிக்கு உயரத்திற்கு மேலாக வெள்ளநீர் செல்வதை சிறுவர்கள் ஆபத்தை உணராமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story