தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்; எல்.முருகன் பேச்சு


பா.ஜனதா வேல் யாத்திரை நிறைவு விழாவில் மாநில தலைவர் எல்.முருகன், மேலிட பார்வையாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்பு
x
பா.ஜனதா வேல் யாத்திரை நிறைவு விழாவில் மாநில தலைவர் எல்.முருகன், மேலிட பார்வையாளர் சி.டி.ரவி, நடிகை குஷ்பு
தினத்தந்தி 8 Dec 2020 5:45 AM IST (Updated: 8 Dec 2020 5:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.

தீய சக்தியை விரட்ட...
திருச்செந்தூரில் நடந்த வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் கடவுள் முருக பெருமானின் கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேல் யாத்திரை நடத்தப்பட்டது. கருப்பர் கூட்டம் எனும் கயவர் கூட்டத்தை தி.மு.க. கூட்டணி 
இயக்குகிறது. இதற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். பல இடையூறுகளைத் தாண்டி 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்த யாத்திரை திருச்செந்தூரில் நிறைவடைந்துள்ளது. தீய சக்தியான தி.மு.க.வை காவிக்கூட்டம் ஓட ஓட விரட்டும். இது திருச்செந்தூரில் 2-வது சூரசம்ஹாரம் போன்று நடந்துள்ளது.

அரசியலுக்காக தி.மு.க. எதிர்க்கிறது
தமிழக அரசியலில் பா.ஜனதா தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப்பொருட்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதையே மோடி தற்போது வேளாண் சட்ட திருத்தத்தின் மூலம் நிறைவேற்றி உள்ளார். முன்பு தி.மு.க.வும் இந்த வேளாண் சட்டம் குறித்து தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. 

அதனைத்தான் மோடியும் நிறைவேற்றி உள்ளார். ஆனால், தற்போது தி.மு.க. அரசியலுக்காக வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது.

விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்பட பிரதமர் நரேந்திர மோடி எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 

தமிழர்களுக்கும், தமிழர்களின் கலாசாரம், பண்பாட்டுக்கும் எதிராக இருப்பவர்களை ஓட ஓட விரட்டும் தருணம் வந்து விட்டது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக் கும். ஏராளமான பா.ஜனதா உறுப்பினர்கள் சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களாக தேர்வு பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.டி.ரவி

பா.ஜ.க. மேலிட பார்வையாளரான சி.டி.ரவி பேசியதாவது:-

பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள் பல்வேறு நாடுகளிலும் இந்து கோவில்களை கட்டி உள்ளனர். தமிழர்களும், இந்து கலாசாரமும் ஒன்றுதான். கோவில் கோபுரத்தை மாநில அரசின் இலச்சினையில் வைத்துள்ள ஒரே மாநிலம் தமிழகம் மட்டும்தான். மக்களிடம் தெய்வ பக்தியை ஒழிப்பதில் தி.மு.க. குறிக்கோளாக உள்ளது. தெய்வங்களை நிந்திப்பதை தி.மு.க.வினர் நிறுத்த வேண்டும்.

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது தமிழ் மொழியின் பெருமையை எடுத்துக்கூறி வருகிறார். கர்நாடக மாநிலத்தைவிட தமிழகத்தில்தான் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் அதிகளவிலான நகரங்கள் மேம்படுத்தப்படுகின்றன. பா.ஜனதா அனைத்து மொழிகளையும் பாதுகாத்து தேசியத்தையும் பாதுகாக்கிறது. இந்து மதத்துக்கு எதிராக பேசுகிறவர்களை ஒதுக்கிவிட வேண்டும். தமிழகத்தில் வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொன். ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

வருகிற சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். கருணாநிதி, காவிக்கொடி பறக்க அரை அடி இடம் கூட தரமாட்டோம் என்று கூறினார். தற்போது தி.மு.க. கொடி பறக்க அரை அடி இடம் கூட கொடுக்க கூடாது என்று முருக பக்தர்கள் உறுதி ஏற்க வேண்டும். இந்து சமுதாயத்திற்கு எழுச்சி ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்யும் வகையில், வருகிற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெறச்செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இல.கணேசன்

மூத்த தலைவர் இல.கணேசன் பேசியதாவது:-

இந்து மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர்களுக்கு பா.ஜனதா கட்சி மட்டுமே குரல் கொடுக்கும். அதனால்தான் பா.ஜனதா கட்சியை இந்து கட்சி என கூறுகிறார் கள். திருமாவளவன் போன்றவர்கள் மனுதர்ம சாஸ்திரங்கள் பற்றி பேசியதால்தான் இதுபோன்ற வேல்யாத்திரையை நடத்துகிறோம்.

தமிழகத்தில் இந்து மதத்தை, இந்து மக்களை அநாவசியமாக பேசி வருகிறார்கள். அதைக்கேட்டு இந்து சமுதாயம் பொறுத்து கொண்டு இருக்காது. நாம் யாரையும் அழிக்க வேண்டாம். அதற்கு மாறாக நாம் வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எச்.ராஜா

எச்.ராஜா பேசியதாவது:-

ரஜினி ஆன்மிக அரசியல் பற்றி கூறியுள்ளார். நாங்கள் பல ஆண்டுகளாக அதை செய்து வருகிறோம். நாத்திக அரசியலுக்கு மாற்று, ஆன்மிக அரசியல். தி.மு.க. எனும் தீய சக்தியை வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும். இதை எம்.ஜி.ஆர். முதல் ஜெயலலிதா வரை கூறியுள்ளனர்.

விவசாய சட்டங்கள் பற்றி விவாதிக்க ஆ.ராசாவோடு ஸ்டாலினும் என்னிடம் வரலாம். தி.மு.க. ஏற்கனவே செய்த பொய் பிரசாரத்தை தமிழக மக்கள் மீண்டும் நம்ப மாட்டார்கள். வடமாநிலங்களில் மண்டிகள் மூலம் பாதல், பவார் ஆகிய இரு குடும்பங்கள் மட்டுமே கொள்ளையடிக்கிறார்கள். இதை தடுக்கும் வகையிலும் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையிலும் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் பா.ஜ.க. மாநில வர்த்தக அணி தலைவர் ராஜகண்ணன், மாநில வர்த்தக அணி செயலாளர் உமரி சத்தியசீலன், மாநில வர்த்தக அணி துணை தலைவர் சென்னை ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் அசோகன், மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், மாவட்ட தலைவர் பால்ராஜ், மாவட்ட வணிகர் பிரிவு செயலாளர் பச்சிராஜன், மண்டல அறிவுசார் பிரிவு தலைவர் சிவாஜி பழனிசாமி, மாவட்ட வணிகர் பிரிவு துணை தலைவர் பழனிவேல், மாவட்ட வக்கீல் பிரிவு துணை தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட ஓ.பி.சி. அணி செயலாளர் கமலகண்ணன், வடக்கு மண்டல பொதுச்செயலாளர் செல்லப்பா, வடக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சரவணகிருஷ்ணன், மாநில பட்டியல் அணி செயலாளர் சிவந்தி நாராயணன், மாவட்ட செயலாளர் ஆத்திராஜ், மண்டல தலைவர் ராம்கி, மண்டல பொதுச்செயலாளர் நாகராஜன், மண்டல செயலாளர் பால்பாண்டி, மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் முத்துவேல், வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் முத்துகுமார், மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வாரியர், தெற்கு மாவட்ட ஊரக நகர்ப்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை முருகன், மாவட்ட அறிவுசார் பிரிவு அமைப்பு செயலாளர் நாட்டாண்மை மனோகர் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story