போலீசார் உடல், மனரீதியாக உளைச்சலில் உள்ளனர்: காவல் துறையினருக்கான ஆணையம் எப்போது அமைக்கப்படும்? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி
“காவல் துறையினருக்கான ஆணையம் எப்போது அமைக்கப்படும்?” என தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.
போலீஸ்காரர்களின் பணிச்சுமை
கரூர் பகுதியை சேர்ந்த மாசிலாமணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது-
தமிழக போலீஸ்துறையில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் மழை, வெள்ளம், வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆயிரம் பேருக்கு 2 பேர் என்ற வீதத்தில் மட்டுமே போலீஸ்காரர்கள் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மத்தியபிரதேசத்தில் போலீஸ்காரருக்கு ரூ.38 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. அதே போல உத்தரப்பிரதேசத்தில் ரூ.40 ஆயிரம் வரையிலும், மேற்கு வங்காளத்தில் ரூ.28,500, மராட்டியத்தில் ரூ.29 ஆயிரத்தில் இருந்து ரூ.34 ஆயிரம்
வரையிலும் அடிப்படை சம்பளமாக கொடுக்கின்றனர். ஏழை நாடான உகாண்டாவில் கூட அடிப்படை சம்பளமாக போலீஸ்காரர்களுக்கு ரூ.47 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மழை, வெயில் போன்றவற்றை பொருட்படுத்தாமல் பணிபுரியும் போலீஸ்காரர்களுக்கு, வெறும் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் போலீஸ்காரராக நியமிக்கப்படும் 90 சதவீதம் பேர், சொந்த ஊரில் இருந்து வெகு தொலைவிலேயே பணியில் நியமிக்கப்படுகின்றனர். எனவே போலீஸ்காரர்களுக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த ஊதியமானது அவர்களது வாழ்க்கையை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை. எனவே 24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக போலீசாரின் ஊதியத்தை உயர்த்தவும், போலீஸ்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
ஆணையம் எப்போது அமைக்கப்படும்?
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “போலீசார் சேவை இல்லாமல் ஒரு மணி நேரம் கூட நம்மால் இருக்க முடியாது. போக்குவரத்து போலீசார் இல்லாமல் வாகனங்கள் சாலையில் செல்லவும் முடியாது. சில சம்பவங்கள் போலீசாருக்கு எதிராக இருந்தாலும் அவர்கள் நமக்கு எப்போதும் தேவை. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் போலீசார் மிகுந்த உளைச்சலில் தான் உள்ளனர்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், போலீஸ்காரர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்னென்ன? காவல் துறையினருக்கு சரியான நேரங்களில் பதவி உயர்வு வழங்கப்படுகிறதா? காவல்துறையில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன? காவல் துறையினருக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் ஊதியம் மற்றும் மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். காவல் துறையினருக்கு என சிறப்பு காப்பீடு செய்யப்பட்டுள்ளதா? கடந்த 2013-ம் ஆண்டு கோர்ட்டு உத்தரவின்படி காவல்துறையினருக்காக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? அமைக்கப்படவில்லை என்றால் எப்போது அமைக்கப்படும்? கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எத்தனை போலீஸ்காரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்?” என்ற கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளிக்கும்படி
நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story