விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் இருகட்சிகளும் போராட்டம்: ராஜபாளையத்தில் அ.தி.மு.க. -தி.மு.க. மோதல்-தடியடி; தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது
ராஜபாளையத்தில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் ஒரே இடத்தில் திரண்டு கோஷம் எழுப்பியதால் மோதல், கல்வீச்சு ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். இதே போல் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் இருகட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருகட்சியினரும் வாக்குவாதம்
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா ஆகிய 2 பேரையும் அவதூறாக விமர்சித்ததாக, அவரை கண்டித்து ராஜபாளையத்தில் தி.மு.க.வினர் நேற்று திரண்டு ராஜேந்திரபாலாஜி உருவபொம்மையை எரிக்க முயன்றனர்.
இந்த தகவல் அறிந்ததும் அ.தி.மு.க.வினர் காந்தி சிலை ரவுண்டானா முன்பு குவிந்தனர். ஒரே இடத்தில் 2 கட்சியை சேர்ந்தவர்களும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து 2 தரப்பினரிடமும் பேசினர். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. மாறாக இருகட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி ஆவேசமாக பேசினர்.
உருவ பொம்மை எரிப்பு
இதற்கிடையே தி.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், தென்காசி தொகுதி எம்.பி. தனுஷ்குமார், ஒன்றிய தலைவர் சிங்கராஜ் மற்றும் தி.மு.க.வினர் அரசு மகப்பேறு மருத்துவமனை வழியாக சென்று அமைச்சரை கண்டித்து கோஷங்களை எழுப்பி தென்காசி சாலையில் உருவ பொம்மையை எரித்தனர்.
இதை அறிந்து அ.தி.மு.க. வினர் நகர செயலாளர் ராணா பாஸ்கரராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் குருசாமி, பேரவை நகர செயலாளர் துரை முருகேசன் உள்பட அ.தி.மு.க. வினர், தி.மு.க. வினரை எதிர்த்து கோஷங்களை எழுப்பியதுடன், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கல்வீச்சு-தடியடி
சற்று நேரத்தில் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வை மாறி, மாறி கோஷங்கள் எழுப்பியதால் மோதலானது. ஒருவர் மீது ஒருவர் கற்கள் மற்றும் செருப்புகளை வீசினர். பின்னர் அ.தி.மு.க.வினர் காந்தி சிலை ரவுண்டானா முன்பு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்தனர்.
பதற்றம் நிலவியதால் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், துணை சூப்பிரண்டு நாக சங்கர் தலைமையில் ஏராளமான போலீசார் வரவழைக்கப்பட்டனர். கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல் மாறியது.
எம்.பி.-எம்.எல்.ஏ. கைது
இதையடுத்து தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., உள்பட தி.மு.க.வை சேர்ந்த 280 பேரையும், அ.தி.மு.க.வை சேர்ந்த 200 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் ராஜபாளையத்தில் சிறிது நேரம் கடைகள் அடைக்கப்பட்டன. ராஜபாளையத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
விருதுநகர்
இதேபோல் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டித்து நேற்று காலையில் தி.மு.க.வினர் விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், உருவ பொம்மையை பறித்தனர். அந்த நேரத்தில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் அமைச்சரின் உருவப்படத்தை எரிக்க முயன்றனர்.
இதனைத்தொடர்ந்து ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ராஜகுரு, இளைஞர் அணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட 166 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அ.தி.மு.க.வும் போராட்டம்
இதற்கிடையே அ.தி.மு.க. வினர் மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன் தலைமையில் விருதுநகர் தேசபந்து திடலில் திரண்டனர். அவர்களிடம் கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.
ஆனாலும் அவர்கள் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் ஆ.ராசாவின் உருவப்படத்தை கிழித்தெறிந்தனர். இந்த போராட்டத்தில் நகர அ.தி.மு.க. செயலாளர் முகமது நயினார், ஒன்றிய செயலாளர்கள் தர்மலிங்கம், கே.கே. கண்ணன், மேற்கு ஒன்றிய பொருளாளர் ராஜசேகர் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தி.மு.க.வினர் 1,370 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் தி.மு.க.வினர் அமைச்சரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்துகொண்ட 1,370 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் அருப்புக்கோட்டையில் 120 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூரில் 160 பேரும், காரியாபட்டியில் 275 பேரும், திருச்சுழியில் 80 பேரும், வத்திராயிருப்பில் 145 பேரும், சிவகாசியில் 165 பேரும், சாத்தூரில் 175 பேரும் அடங்குவர்.
அ.தி.மு.க. 10 இடங்களில் போராட்டம்
இதே போல் ஸ்டாலின், ஆ.ராசாவை கண்டித்து அ.தி.மு.க.வினர் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, சிவகாசி, வத்திராயிருப்பு, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்பட 10 இடங்களில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story