ராமநாதபுரத்தில் மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு: மிளகாய் பொடி தூவிச்சென்ற நபர்களுக்கு வலைவீச்சு


திருட்டு நடந்த வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்தபோது எடுத்த படம்
x
திருட்டு நடந்த வீட்டில் போலீசார் தடயங்களை சேகரித்தபோது எடுத்த படம்
தினத்தந்தி 8 Dec 2020 8:19 AM IST (Updated: 8 Dec 2020 8:19 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மசாலா ஏஜென்சி உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை திருடி விட்டு மிளகாய் பொடியை தூவிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மசாலா ஏஜென்சி

ராமநாதபுரம் யானைக்கல்வீதி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் ரெங்கராஜன் (வயது 35). மசாலா பொருட்கள் உள்ளிட்ட பல நிறுவன ஏஜென்சி எடுத்து நடத்தி வருகிறார். இவர் தனது மனைவி மீனாட்சி மற்றும் குழந்தைகளுடன் திருச்சியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதன் உள்ளே இருந்த ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், ஒரு பவுன் மோதிரம் முதலியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதற்கிடையே வீட்டிற்கு வந்த ரெங்கராஜன் பீரோ திறக்கப்பட்டு நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநாதபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் அச்சம்

போலீஸ் மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. திருடர்கள் வீட்டில் திருடிவிட்டு மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக வீட்டிற்குள் இருந்த மிளகாய்பொடியை எடுத்து பரவலாக பல பகுதிகளில் தூவி விட்டு சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து மக்களின் 
அச்சத்தை போக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story