சேலத்தில், மூத்த மகன் புற்றுநோயால் இறந்ததால் விபரீத முடிவு: 2 மகன்களை கொன்று கணவன்-மனைவி தற்கொலை


பிணமாக கிடந்த கோகிலா, கார்த்திக்; முருகன், வசந்தகுமார்; உறவினர்கள் கதறி அழுத பரிதாப காட்சி.
x
பிணமாக கிடந்த கோகிலா, கார்த்திக்; முருகன், வசந்தகுமார்; உறவினர்கள் கதறி அழுத பரிதாப காட்சி.
தினத்தந்தி 8 Dec 2020 9:17 AM IST (Updated: 8 Dec 2020 9:17 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மூத்த மகன் புற்றுநோயால் இறந்த துயரத்தால் மற்ற 2 மகன்களை கொன்று விட்டு கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

புற்றுநோயால் அவதி
சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை அருகே உள்ள வால்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் சேலம் கோட்டை பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் வேலைப்பார்த்து வந்தார். இவருடைய மனைவி கோகிலா(35). இவர்களுக்கு மதன்குமார் (17), வசந்தகுமார்(15), கார்த்திக்(12) என்ற 3 மகன்கள் இருந்தனர். இதில் வாய்க்கால்பட்டறை அரசு பள்ளியில் வசந்தகுமார் 10-ம் வகுப்பும், கார்த்திக் 7-ம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் முருகனின் மூத்த மகன் மதன்குமார் கடந்த சில ஆண்டுகளாக ரத்த புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். 

இதனிடையே புதுச்சேரியில் உள்ள ஆஸ்பத்திரியில் மதன்குமார் சிகிச்சை பெற்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மார்ச் மாதம் 19-ந் தேதி அவர் பரிதாபமாக இறந்தார்.

பிணமாக கிடந்தனர்
மதன்குமாரின் இறப்பு அந்த குடும்பத்தையே மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. குறிப்பாக முருகன், கோகிலா ஆகிய இருவரும் மூத்த மகன் நினைப்பிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. மகனின் புகைப்படத்தையே செல்போனில் அடிக்கடி பார்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை 11 மணி அளவில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் முருகனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருடைய வீட்டின் கதவு லேசாக திறந்து கிடந்தது. பலமுறை கூப்பிட்டும் சத்தம் கொடுக்காததால் சந்தேகமடைந்த அவர் உள்ளே எட்டி பார்த்தபோது வீட்டுக்குள் முருகன், கோகிலா மற்றும் அவர்களுடைய மகன்கள் ஆகியோர் பிணமாக கிடந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து உடனடியாக உறவினர்களுக்கும், அம்மாபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் துணை கமிஷனர் சந்திரசேகரன், உதவி கமிஷனர் ஆனந்தகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், சிவகாமி, நித்யா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். 

அங்கு இறந்து கிடந்தவர்கள் அருகே 2 டம்ளர்களில் டீ மற்றும் ஒரு குளிர்பான பாட்டில், ஒரு காலியான பாட்டில் கிடந்தது.

மகன்களை கொன்று தற்கொலை
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது. அதாவது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புற்றுநோயால் மூத்த மகன் மதன்குமார் இறந்த துக்கத்தில் இருந்த முருகன் மற்றும் கோகிலா ஆகியோர் டீயில் விஷம் கலந்து கொடுத்து தனது 2 மகன்களை கொன்று விட்டு, பின்னர் அவர்களும் குடித்து தற்கொலை செய்து கொண்டது 

தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வந்து இறந்தவர்களின் உடல்களை பார்வையிட்டு, உறவினர்களிடம் விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து இறந்தவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story