தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான நிலம் எடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்; ஆய்வுக்கூட்டத்தில் ஆணையர் அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கான நிலம் எடுப்பு பணியை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வுக்கூட்டத்தில் மாநில நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சால் அறிவுறுத்தினார்.
ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பான அதிகாரிகள் ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக மேலாண்மை இயக்குனரும், மாநில நில நிர்வாக ஆணையருமான பங்கஜ்குமார் பன்சால் தலைமை தாங்கினார்.
கலெக்டர் கார்த்திகா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாநில நில நிர்வாக ஆணையர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் புலிகரை கால்வாய் திட்டம், தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைகளில் இணைப்பு கால்வாய் திட்டம், வெண்ணாம்பட்டி ரெயில்வே மேம்பாலம், சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கான பணிகளை தொடங்கிட இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கான நிலம் எடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சுமூக தீர்வு
நிலம் எடுப்பு பணிகளில் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி நிலம் வழங்கும் பொதுமக்களிடம் சுமூக தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் நிலம் எடுப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும். நிலம் வழங்கிய பொதுமக்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, உதவி கலெக்டர்கள் பிரதாப், தணிகாசலம், ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அலுவலர் முகுந்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, கலால் உதவி ஆணையர் தேன்மொழி, தனித்துணை கலெக்டர் இளவரசி மற்றும் தாசில்தார்கள், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story