டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 118 பேர் கைது


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 118 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2020 4:53 AM IST (Updated: 9 Dec 2020 4:53 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெரம்பலூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 118 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர்,

மத்திய அரசு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் எதிர்த்தும், அச்சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் போராடும் விவசாயிகள் சார்பில் டிசம்பர் 8-ந் தேதி நாடு முழுவதும் முழு அடைப்பு (பாரத் பந்த்) நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தனர். அதன்படி நேற்று பெரம்பலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க, விவசாயிகள் சங்கங்களின் போராட்ட குழுவினர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சார்பில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

போலீசார் குவிப்பு

இதனால் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சாலை மறியல் போராட்டம் நடத்துவதற்காக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்லத்துரை தலைமையில், விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளை சேர்ந்தவர்களும் நேற்று காலையில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ஒன்று கூடினர்.

சாலை மறியல்

அப்போது மழை சற்று நின்ற போது விவசாயிகள், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட புதிய பஸ் நிலையம் நோக்கி சென்றனர். ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் மறியல் செய்ய வந்தவர்களை தடுப்பு கயிறு கட்டியும் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று போலீசார் எச்சரித்தும், போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் 3 வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்றும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளிடம் மத்திய அரசு நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

118 பேர் கைது

போராட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தங்கராசு, திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் கிட்டு, இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் ரகுபதி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின், மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ரபிக், ம.தி.மு.க.வை சேர்ந்த துரைராஜ் மற்றும் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 118 பேரை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி, அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 118 பேர் மீதும் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்களமேடு

குன்னம் பஸ் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். வேப்பூர் ஒன்றிய துணை பெருந்தலைவர் செல்வராணி வரதராஜன், வேப்பூர் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் கதிரவன், நந்தன் உள்பட பலர் கலந்த கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.இதேபோல் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் சவுகத் அலி தலைமையில் மாவட்டத்தில் உள்ள 240 மருந்தகத்திலும் பணிபுரிபவர்கள் கருப்பு பட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

Next Story