மணப்பாறை அருகே பள்ளியின் சுற்றுச்சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி


மணப்பாறை அருகே பள்ளியின் சுற்றுச்சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 Dec 2020 6:22 AM IST (Updated: 9 Dec 2020 6:22 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே பள்ளியின் சுற்றுச்சுவர் வீட்டின் மீது இடிந்து விழுந்ததில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கொட்டப்பட்டியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி (40). இவர்களுக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள புனித சவேரியார் நடுநிலைப்பள்ளியின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து செல்வகுமார் வீட்டின் பின்பகுதியில் விழுந்தது.

இதில், செல்வகுமார் மற்றும் அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணப்பாறை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் ஜி.என்.ஆர். மீட்பு குழுவினர், மணப்பாறை போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருகில் உள்ளவர்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கிடந்த ராசாத்தியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலி

ஆனால், பலத்த காயமடைந்த செல்வகுமாரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களது மகன், மகள்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சம்பவ இடத்தை மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ், வருவாய் ஆய்வாளர் சிவசுப்ரமணியன், கிராம நிர்வாக அலுவலர் பெரியண்ணன் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

சாலை மறியல்

இந்தநிலையில், இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கிட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இடிந்த வீட்டுக்கு பதிலாக புதிதாக வீடு கட்டித்தர வேண்டும். குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள சுடுகாட்டை வேறு இடத்திற்கு மாற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை செல்வகுமாரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மணப்பாறை-குளித்தலை சாலையில் கொட்டப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது. சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. மற்றும் பிற கட்சியினர் செல்வகுமார் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Next Story