விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 376 பேர் கைது


விவசாயிகளுக்கு ஆதரவாக கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் 376 பேர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2020 7:48 AM IST (Updated: 9 Dec 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியினர் 376 பேரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி,

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நேற்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. தென்காசி மாவட்டத்தில் நேற்று விவசாயிகளுக்கு ஆதரவாக 7 இடங்களில் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கணபதி, வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மறியலில் ஈடுபட்ட மாவட்ட துணைச்செயலாளர் இசக்கிதுரை, நிர்வாகிகள் அயூப்கான், கண்ணன், லெனின்குமார், சங்கரி உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் பெண்கள்.

செங்கோட்டை-சங்கரன்கோவில்

இதுதவிர செங்கோட்டை, சுரண்டை, ஆய்க்குடி, கடையம், சங்கரன்கோவில், மருதம்புத்தூர் ஆகிய 6 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் வேலுமயில் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா உதவி செயலாளர் சுந்தர், நகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

சங்கரன்கோவிலில் கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஏராளமானவர்கள் திரண்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது போலீசார் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

370 பேர் கைது

தொடர்ந்து அவர்கள் தடுப்புகளை தாண்டி தபால் நிலையம் முன்பு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ், பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட செயலாளர் தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. மறியலில் ஈடுபட்ட நிர்வாகிகள் உச்சிமாகாளி, பாலுச்சாமி, லட்சுமி, குமார் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை பஸ் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில பொதுக்குழு உறுப்பினர் போஸ் தலைமை தாங்கினார். மறியலில் ஈடுபட்ட வீரகேரளம்புதூர் தாலுகா செயலாளர் அய்யப்பன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் 7 இடங்களில் நடந்த போராட்டத்திலும் மொத்தம் 340 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story