திருப்பத்தூரில் கடைகள் அடைப்பு; சாலைமறியல்
எதிர்க்கட்சிகள் சார்பில் நடத்தப்பட்ட பந்த் காரணமாக நேற்று திருப்பத்தூரில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர்,
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் நேற்று எதிர்க்கட்சிகள் சார்பில் பந்த் நடத்தப்பட்டது. இந்த பந்த் காரணமாக திருப்பத்தூரில் ஆட்டோக்கள் ஓடவில்லை. திருப்பத்தூரில் இருந்து சித்தூர், திருப்பதி மற்றும் புதுச்சேரி செல்லும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. திருப்பத்தூர்- கிருஷ்ணகிரி மெயின் ரோடு, நகைக்கடை பஜார், ஆலங்காயம் ரோடு, வாணியம்பாடி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. சினிமா தியேட்டர்களில் 2 காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அரசு பஸ்கள் வழக்கம்போல ஓடியது.
நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொகுதி தலைவர் வீரராஜாதேசிங், தொடங்கிவைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்யக்கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினார்கள். இதில் ஜோலார்பேட்டை தொகுதி செயலாளர் பழனிச்சாமி, தலைவர் கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் சுந்தரேசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் சாமிகண்ணு தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர். திடீரென கிருஷ்ணகிரி -வாணியம்பாடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை டவுன் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல ஆதிதமிழர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேளாண்மை சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், உதயேந்திரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின.
வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசெல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Related Tags :
Next Story