நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பயணம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பயணம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 10 Dec 2020 7:57 AM IST (Updated: 10 Dec 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வயலில் இறங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டார்.

தஞ்சாவூர்,

‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ புயல் காரணமாக தமிழகத்தில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

அதன்படி நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அன்று இரவு நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள ஹோட்டலில் அவர் தங்கினார். நேற்று நாகை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆய்வு

நாகை மாவட்டத்தில் பெய்த கன மழையால் சுமார் 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்த பாதிப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக சேதம் அடைந்த நாகூர் ஆண்டவர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவர் மற்றும் சேதம் அடைந்த குளக்கரை சாலையை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் சேத விபரங்களை கேட்டறிந்ததுடன் உடனடியாக சேதத்தை சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வயலில் இறங்கி பார்த்தார்

பின்னர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள மேல பிடாகை, கருங்கண்ணி பகுதியில் வயலில் இறங்கி மழையால் சேதமடைந்த நெற் பயிர்களை பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது விவசாயி ஒருவர் தனது வயலில் தண்ணீரில் மூழ்கி இருந்த நெற்பயிரை பிடுங்கி வந்து முதல்-அமைச்சரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்த்த முதல்-அமைச்சர், இது எத்தனை நாள் பயிர்? எனவும், இந்த நெற்பயிரை காப்பாற்ற முடியுமா? எனவும் கேட்டார்.

உரிய இழப்பீடு

அதற்கு விவசாயி, முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருப்பதால் இந்த பயிர் அழுகி விடும் எனவும், இதற்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அதைக் கேட்ட முதல்-அமைச்சர், மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். பின்னர் அதே பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் குறித்த புகைப்பட காட்சிகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர், வேதாரண்யத்தை அடுத்த பழங்கள்ளிமேடு கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 160 குடும்பங்களைச் சேர்ந்த 364 பேரை சந்தித்தார். அனைத்து குடும்பங்களுக்கும் அரிசி, பருப்பு, வேட்டி மற்றும் புடவை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்.

ரூ.4 லட்சத்துக்கான காசோலை

மேலும் மழையால் உயிரிழந்த நாகை மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி கிராமத்தை சேர்ந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். முகாம் வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையத்தில் சமையல் பணிகளை பார்வையிட்டார். மருத்துவத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கு சென்ற முதல்-அமைச்சர் சேற்றுப் புண்ணுக்கு தடவும் மருந்து குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

முதல்-அமைச்சர் வருகைக்கு முன்பு திடீரென பலத்த மழைப்பொழிவு ஏற்பட்டபோதிலும் அதைப்பொருட்படுத்தாமல் சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள், அ.தி.மு.க தொண்டர்கள் குடை பிடித்துக்கொண்டே வரவேற்றனர். பின்னர் அவர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி அடப்பாற்றை பார்வையிட்டார்.

வயலுக்குள் இறங்கி ஆய்வு

தொடர்ந்து கொக்கலாடியில் மழைநீர் தேங்கிய வயலை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், வயலுக்குள் இறங்கி தண்ணீரில் மூழ்கிய நெற்பயிரை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பேசினார். மேலும் 500 பேருக்கு நிவாரணப் பொருட்களையும் வழங்கினார். இதையடுத்து அவர், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். மேலும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் பெற்றுக்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கச்சனத்தில் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை பார்வையிட்டார். பின்னர் தென்னவராயன் நல்லூரில் விவசாயிகள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

வீடு கட்ட ஆணை

நன்னிலம் அருகே உள்ள குவளைகால் கிராமத்தில் தங்கராசு என்பவரின் ஓட்டு வீடு மழையால் முற்றிலும் இடிந்துபோனது. இந்த வீட்டை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தங்கராசுவுக்கு ஆறுதல் கூறியதுடன், அவருக்கு பசுமை வீடு கட்டிக்கொடுப்பதற்கான ஆணையை வழங்கினார். தொடர்ந்து கொல்லுமாங்குடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்று அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

மயிலாடுதுறை-பூம்புகார்

மாலையில் மயிலாடுதுறை நகரம் வழியாக மொழையூர் கிராமத்திற்கு சென்றார். அப்போது இரவு 7 மணி ஆனதால் அங்கு மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்திலும் அங்கு விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் பாதிக்கப்பட்ட நெற்பயிரை முதல் அமைச்சர் பார்வையிட்டார். அப்போது விவசாயி சண்முகம் என்பவர், தனது வயலில் வெள்ள நீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட நெற்பயிரை பறித்து வந்து முதல்-அமைச்சரிடம் காண்பித்தார். அதனை முதல்-அமைச்சர் கையில் வாங்கி பார்த்து ஆய்வு செய்தார்.

பின்னர் பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட நல்லாடை பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து முளையூர் பகுதியில் தண்ணீரில் மூழ்கிய விளைநிலங்களை பார்வையிட்ட பின்னர் சட்டநாதபுரத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். தொடர்ந்து எருக்கூர் பகுதியில் விவசாய பகுதிகளை பார்வையிட்ட அவர், ஆணைக்காரன்சத்திரம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் வேலுமணி, ஆர்.காமராஜ், கே.பி. அன்பழகன், ஓ.எஸ். மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர், மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு அதிகாரி லலிதா, மயிலாடுதுறை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.ஜி.கே. செந்தில்நாதன், எம்.எல்.ஏ.க்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story