காரைக்குடி அருகே சூரை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


காரைக்குடி அருகே சூரை நோய் தாக்கி நெற்பயிர்கள் சேதம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Dec 2020 6:48 PM IST (Updated: 10 Dec 2020 6:48 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி அருகே பயிரிடப்பட்ட நெற்பயிர்களில் சூரை நோய் தாக்கி சேதமடைந்துள்ளதால் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி, 

நிவர் புயல், புரெவி புயல் என அடுத்தடுத்து வந்த புயல்களால் தொடர் மழை பெய்ததால் சிவகங்கை மாவட்டம் முழுவதும் இதுவரை 21 கண்மாய்கள் வரை நிரம்பி உள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் நீர்நிலைகள் காணப்பட்டதால் தற்போது பெய்த மழைக்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சிடையந்தாலும் கூட மழையினால் ஏற்கனவே பயிரிடப்பட்ட நெற்பயிர்களுக்கு வேண்டிய பருவத்தில் தண்ணீர் கிடைக்காமல் தற்போது தண்ணீர் வந்துள்ளதால் வேரில் சூரை நோய் தாக்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன.

காரைக்குடியை அடுத்துள்ள பெரியகொட்டக்குடி ஊராட்சிக்குட்பட்ட நெம்மேனி, பெரியகொட்டக்குடி, தச்சக்குடி, சோனார்கோட்டை, கண்டன்கரிவயல், அழகுநாச்சியேந்தல், சின்னகொட்டக்குடி, நக்கீரன்வயல், சிறுகவயல் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1200 ஏக்கர் வரை விவசாய நிலங்கள் உள்ளன. இதனால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை நம்பி உள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் கண்மாய்களில் நிரம்பும் தண்ணீரை வைத்துதான் விவசாயம் செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதத்திற்கு முன்பு இந்த பகுதியில் பெய்த மழையை நம்பி இப்பகுதி விவசாயிகள் சுமார் 500ஏக்கர் வரை டீலக்ஸ் பொன்னி, சி.ஆர். குண்டுரக நெற், விதை நெற் உள்ளிட்ட பல்வேறு வகையான நெற் பயிர்களை 160 நாட்கள் பருவத்தில் பயிரிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த நெற் பயிரிட்டு 30 நாட்களுக்குள் பெய்ய வேண்டிய பருவ மழையானது 90 நாட்களுக்கு பின்னர் பெய்துள்ளதால் இடைப்பட்ட காலங்களில் பயிர்களில் நெற்கதிர்கள் பிடிக்காமல் வறண்ட நிலையில் இருந்தன. தற்போது பெய்த தொடர் மழையினால் அந்த நெற் பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் முழ்கிய நிலையில் சூரை நோய் தாக்கி பயனில்லாமல் போனது. இதனால் இந்தாண்டு விவசாயிகளுக்கு பருவ மழை பெய்தும் கூட அவை எவ்வித பயனும் இல்லாமல் போனதாக கவலையுடன் கூறி வருகின்றனர்.

மேலும், சேதமடைந்த நெற் பயிர்களுக்கு உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story