14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை - நாமக்கல் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கொல்லிமலையில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சேளுர்நாடு ஊராட்சி கன்னமாங்குளப்பட்டி கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக இந்த மாணவி செம்மேடு பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த தின்னனூர் நாடு ஊராட்சி சேத்து பலாப்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இளவரசன் (வயது 23) மாணவியை மோட்டார்சைக்கிளில் கடத்திச்சென்று அரைக்கால்பட்டி காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட இளவரசனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இளவரசனை போலீசார் கோவை சிறைக்கு கொண்டு சென்றனர்.
Related Tags :
Next Story