காலாவதியான சுரங்கங்களை நீரை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்த வேண்டும்; கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தல்
காலாவதியான சுண்ணாம்புக்கல் சுரங்கங்களை நீரை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்த வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கருத்து கேட்பு கூட்டம்
அரியலூரை அடுத்த கயர்லாபாத் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு சிமெண்டு ஆலைக்கு அப்பகுதியில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இயங்கி வருகிறது. இந்நிலையில், அந்த சுண்ணாம்புக்கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வது குறித்து விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று கயர்லாபாத் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் ரத்னா தலைமை தாங்கினார். மாவட்ட மாசு கட்டுப்பாடு செயற்பொறியாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள், கிராம மக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். சமூக ஆர்வலர் இளவரசன் பேசுகையில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ள சுரங்க விரிவாக்கம் குறித்த தகவலை, தமிழில் வழங்க வேண்டும். சுரங்கத்துக்கு நிலம் கொடுத்தோர் மற்றும் அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு ஆலையில் வேலை வழங்க வேண்டும். காலாவதியான சுரங்கங்களை மூட வேண்டும். அல்லது நீரை சேமிக்கும் இடங்களாக பயன்படுத்தி, நீர் ஆதாரத்தை பெருக்கி மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்றார்.
பாதுகாப்பு உபகரணங்கள்
மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், ஆலையில் உள்ள மருத்துவமனையில் பொதுமக்களும் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். விவசாயி தமிழரசன் பேசுகையில், ஆலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் வேலையில் அமர்த்துவதை நிறுத்தி, புதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும். ஆலையினை இரவு நேரத்தில் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.
சமூக ஆர்வலர் சங்கர் பேசுகையில், சிமெண்டு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என்றார். விவசாயி முருகேசன் பேசுகையில், ஆலையின் பொது மேலாளரை அடிக்கடி மாற்றுவதை நிறுத்த வேண்டும் என்றார். தமிழ்ப்பேரரசு கட்சி மாவட்ட செயலாளர் முடிமன்னன் பேசுகையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாதந்தோறும் மாசு நிலவரம் குறித்து தகவல் வெளியிட வேண்டும் என்றார். மேலும் உசேனாபாத், கல்லங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.
பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகம், டெல்லி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட்டு, பொதுமக்களின் நலன் கருதி திட்டங்கள் செயல்படுத்தப்படும், என்று கலெக்டர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story