போடியில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையம் உள்பட ரூ.2 கோடியில் புதிய கட்டிடங்கள்; துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்


போடியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்த போது எடுத்தபடம்
x
போடியில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்த போது எடுத்தபடம்
தினத்தந்தி 13 Dec 2020 1:15 AM IST (Updated: 12 Dec 2020 11:44 PM IST)
t-max-icont-min-icon

போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையங்கள் உள்பட ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

புதிய கட்டிடங்கள் திறப்பு
போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரண்மனைப்புதூர் ஊராட்சி கோட்டைப்பட்டி, சீலையம்பட்டி, போடி ஆகிய இடங்களில் ரூ.2 கோடியே 4¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடை, நுண்ணுயிர் உரக்கலவை கூடங்கள் ஆகிய புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த கட்டிடங்களை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

அதன்படி, கோட்டைப்பட்டியில் போடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அங்கன்வாடி மைய கட்டிடங்கள்
அதைத்தொடர்ந்து சீலையம்பட்டி ஊராட்சியில் ரூ.8¾ லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடத்தை ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அங்கு இருந்த ரேஷன் பொருட்களின் தரத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் போடி நகராட்சிக்குட்பட்ட 4 இடங்களில் தலா ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 நுண்ணுயிர் உரக்கலவை கூடங்கள் ஆகியவற்றை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்து அவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த விழாக்களில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், தேனி எம்.பி. ரவீந்திரநாத், கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏகாம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story