கட்சி தொடங்க உள்ள நிலையில், ரஜினிகாந்த் கூறிய வாசகங்கள் இடம்பெற்ற டி-சர்ட்டுகள்; திருப்பூரில் தயாரிப்பு மும்முரம்
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் கூறிய வாசகங்கள் இடம் பெற்ற டி-சர்ட்டுகள் தயாரிக்கப்பட்டு தயாரிப்பு திருப்பூரில் மும்முரம்மாக நடந்து வருகிறது.
ரஜினிகாந்த் அறிவிப்பு
பின்னலாடை தயாரிப்புக்கு பெயர் பெற்ற திருப்பூரில் ஆண்டு முழுவதும் ஆடை தயாரிப்பு நடந்து வருகிறது. கோடை மற்றும் குளிர்கால சீசன்களின் போது, அது தொடர்பான ஆடை தயாரிப்பு நடந்து வருகிறது.
இதுபோல் அவ்வப்போது வருகிற குறுகிய கால சீசன்களின்படியும் தொழில்துறையினர் ஆடைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இதில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி மற்றும் கால்பந்து போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கும்.
இதுதவிர சமூக வலைதளங்களில் பிரபலமாகும் வசனங்கள் மற்றும் நடிகர்கள், நடிகைகளின் பேச்சுகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுகள் போன்றவற்றை மையப்படுத்தியும், திருப்பூரில் ஆடை தயாரிப்பு நடந்து வருகிறது. சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் தொண்டர்கள் இந்த டி-சர்ட்டுகளை வாங்கி அணிந்து மகிழ்வார்கள்.
இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்து, மேலும் அவர் குறிப்பிட்டு பேசிய சில வார்த்தைகளை பயன்படுத்தி திருப்பூரில் டி-சர்ட்டுகள் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.
டி-சர்ட்டுகள் தயார்
இது குறித்து டி-சர்ட் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாகவும், வருகிற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இப்போ இல்லைனா எப்பவும் இல்லை, மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம் என்கிற வாசகங்களை ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த வாசகங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனால் இதனை வைத்து திருப்பூரில் உள்ள பல நிறுவனங்களில் ரஜினிகாந்த் உருவப்படத்துடன், இந்த வாசகங்களை பயன்படுத்தியும், ஆன்மிக அரசியல், அதிசயம் அற்புதம் என்பது உள்ளிட்ட
வாசகங்களையும் பிரிண்ட் செய்து டி-சர்ட்டுகள் தயார் செய்து வருகிறோம்.
இந்த டி-சர்ட்டுகளுக்கு பலரிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. பல மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் குவிந்து வருகிறது. கட்சி அறிவிப்பு வெளியாகும் போது ரசிகர் மன்றங்களில் இருந்து
நேரடியாக அதிகளவு ஆர்டர்கள் கிடைக்கும். இதற்கான ஆர்டர்களை பெறவும் தயாராகி வந்து கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story