திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியல் முயற்சி 24 பேர் கைது


திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியல் முயற்சி 24 பேர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2020 6:36 AM IST (Updated: 13 Dec 2020 6:36 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளுக்கு ஆதரவாக ரெயில் மறியலுக்கு முயன்ற காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 24 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி, 

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் நேற்று திருச்சி ஜங்சன் ரெயில் நிலையம் முன்பு ரெயில் மறியல் முயற்சியில் ஈடுபட்டனர். முன்னதாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் கவித்துவன் தலைமையில் ரெயில்வே அருங்காட்சியகம் அருகில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர்.

போராட்டத்தை வாழ்த்தி தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னத்துரை, தமிழ்நாடு முற்போக்கு பெண் வக்கீல்கள் சங்க தலைவி பானுமதி, தமிழ் தேசிய பேரியக்க திருச்சி மாநகர செயலாளர் இலக்குவன் ஆகியோர் பேசினர். பின்னர் ஊர்வலம், திருச்சி ஜங்சன் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை அலுவலகம் முன்பு வந்ததும், கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் விக்டர் தலைமையிலான போலீசார் மேற்கொண்டு முன்னேற விடாமல் தடுத்தனர்.

24 பேர் கைது

அதைத்தொடர்ந்து அங்கேயே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, புதிய வேளாண் சட்டங்களை அரசு கைவிட வேண்டும் என்றும், வடநாட்டில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம் என்று முழங்கினர். அதைத்தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்ற காவிரி உரிமை மீட்புக்குழுவினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story