சோளிங்கரில் கோவில் குளத்தில் மூழ்கி கல்லூரி மாணவர், மாணவி பலி


குளத்தில் மூழ்கி பலியான ஜெகன்-அபிநயா
x
குளத்தில் மூழ்கி பலியான ஜெகன்-அபிநயா
தினத்தந்தி 14 Dec 2020 1:15 AM IST (Updated: 14 Dec 2020 12:03 AM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த கல்லூரி மாணவர், பள்ளி மாணவி கோவில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கார்த்திகை மாத விழா
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோகநரசிம்மர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் யோக நிலையில் இருக்கும் நரசிம்மர் கார்த்திகை மாதத்தில் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். தற்போது கார்த்திகை மாத விழா நடந்து வருகிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தட்டாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரு வேனில் சோளிங்கருக்கு வந்தனர். அவர்கள், யோகஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்னமலை அடிவாரத்தில் உள்ள பாண்டவ தீர்த்தகுளத்திற்கு சென்றனர். அவர்களுடன் வந்த ஜெகன் (வயது 18), அபிநயா (14) ஆகியோர் அந்த தீர்த்தகுளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக இருவரும் ஆழமான இடத்தில் இறங்கியதால் தண்ணீரில் தத்தளித்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் ஜெகனும், அபிநயாவும் நீரில் மூழ்கி இறந்து விட்டனர்.

தகவல் அறிந்த கொண்டபாளையம் போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கல்லூரி மாணவர்
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஜெகன் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது தந்தை ஜெயராமன் இறந்து விட்டதால், ஜெகனை அவரது தாயார் மற்றும் அண்ணன் ஜெயக்குமார் ஆகியோர் வளர்த்து வந்தனர்.

அதேபோல் அபிநயாவின் தந்தை சக்திவேல். அங்குள்ள ஒரு பள்ளியில் அபிநயா 10-ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும், தங்கள் கிராமத்தினருடன் கோவிலுக்கு வந்த இடத்தில் குளத்தில் மூழ்கி இறந்தது குறித்து இருவரின் பெற்றோருக்கு சோளிங்கர் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

சோகம்
இதனையடுத்து 2 பேரின் பெற்றோரும் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஜெகன், அபிநயா உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களை பார்த்து அவர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story