10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம்; கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி; போராட்டம் தொடரும் என அறிவிப்பு


போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேச்சுவார்த்தை நடத்திய போது
x
போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடன், துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேச்சுவார்த்தை நடத்திய போது
தினத்தந்தி 14 Dec 2020 3:36 AM IST (Updated: 14 Dec 2020 3:36 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களுடன் நேற்று அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் அவர்கள் போராட்டம் தொடருவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்கள்
அதில் அந்த ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். போக்குவரத்து துறையை கவனிக்கும் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதியை நேரில் சந்தித்து மனு அளிக்க அந்த ஊழியர்களின் பிரதிநிதிகள் விதான சவுதாவுக்கு சென்றனர். ஆனால் அவர்களை லட்சுமண் சவதி சந்திக்க மறுத்துவிட்டார். போக்குவரத்து அதிகாரிகளும் வந்து கோரிக்கை மனுவை வாங்கவில்லை.

இதையடுத்து ஆக்ரோஷம் அடைந்த அந்த ஊழியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முன்கூட்டியே திட்டமிடப்படாத நிலையில் தங்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போக்குவரத்து ஊழியர்கள் கடந்த 11-ந் தேதி திடீரென காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

பேச்சுவார்த்தை
அன்றைய தினம் அரசு பஸ்களின் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அதைத்தொடர்ந்து ஊழியர்கள் உறுப்பினர்களாக உள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் போராட்டம் நடத்துகிறவர்கள் சார்பில் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

போராட்டம் நடத்துகிறவர்கள், தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அறிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்-மந்திரி எடியூரப்பாவை நேரில் சந்தித்து லட்சுமண் சவதி ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் முடிவு செய்தபடி, போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் லட்சுமண் சவதி நேற்று காலை விகாச சவுதாவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

10 அம்ச கோரிக்கைகள்
இதில் மூத்த மந்திரிகளான வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், போலீஸ் மந்திரி பசவராஜ் பொம்மை, பி.எம்.டி.சி. தலைவர் நந்தீஸ்ரெட்டி, கே.எஸ்.ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் சிவயோகி கலசத், பி.எம்.டி.சி. நிர்வாக இயக்குனர் ஷிகா உள்பட உயர் அதிகாரிகள், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் அனந்த சுப்பாராவ், சி.ஐ.டி.யு. உள்பட 5 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்துரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பாவை லட்சுமண் சவதி நேரில் சந்தித்து எடுத்துக் கூறினார். அதில் எடியூரப்பா, 10 கோரிக்கைகளில் அரசு ஊழியராக்க வேண்டும் என்பதை தவிர்த்து மீதி 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அனுமதி அளித்தார்.

சுமுக உடன்பாடு
இதுகுறித்து லட்சுமண் சவதி நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தவிர்த்து தொழிற்சங்க நிர்வாகிகள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நாங்கள் தயாராக உள்ளோம். அதுகுறித்து முதல்-மந்திரியுடன் ஆலோசனை நடத்தினேன்“ என்றார். அதன் பிறகு லட்சுமண் சவதி மீண்டும் தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் போராட்டம் நடத்துகிறவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களிடம் முதல்-மந்திரி எடியூரப்பா கூறிய விஷயங்களை எடுத்துக் கூறினார். மேலும் இதில் அரசு எடுத்துள்ள முடிவுகளையும் லட்சுமண் சவதி விளக்கினார். இதை போக்குவரத்து ஊழியர்கள் ஒப்புக்கொண்டு, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக கூறினர்.

அதன் பிறகு லட்சுமண் சவதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அரசு போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நான் இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தினேன். என்னுடன் மூத்த மந்திரிகளும் இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

9 கோரிக்கைகள்
போக்குவரத்து ஊழியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துவது, பணியின்போது கொரோனா தாக்கி மரணம் அடைந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் நிதி உதவி வழங்குவது, புதிய ஊழியர்களின் பயிற்சி காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பது, கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரவு நேர தங்கும் படி வழங்குவது, ஊழியர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக குழு அமைப்பது, 6-வது ஊதிய குழு பரிந்துரைப்படி சம்பளத்தை உயர்த்துவது, போக்குவரத்து கழக மண்டலங்கள் இடையே பணி இடமாற்றத்தை அமல்படுத்த ஒரு குழு அமைப்பது, பரிசோதனையின்போது, டிக்கெட் வழங்காமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் நடத்துனருக்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்வது உள்பட 9 கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

நிதிநிலை சரியான பிறகு 6-வது ஊதிய குழுவின் பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். தங்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது சாத்தியமில்லை என்று நாங்கள் கூறிவிட்டோம். இதை போக்குவரத்து ஊழியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்று (அதாவது நேற்று) இரவு முதலே அரசு பஸ்கள் ஓடத்தொடங்கும். போக்குவரத்து ஊழியர்கள் ஒரு குடும்பத்தை போன்றவர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம்.

இவ்வாறு லட்சுமண் சவதி கூறினார்.

போராட்டம் தொடரும் என அறிவிப்பு
ஆனால் அரசு ஊழியராக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அரசு நிராகரித்துவிட்டதால் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மந்திரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவர் சந்துரு, சுதந்திர பூங்காவிற்கு வந்து போராட்டம் நடத்தும் ஊழியர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினார்.

அதன் பிறகு அவர் பேசுகையில், “போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்ற நமது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. அதனால் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே நமது வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம். அதனால் ஊழியர்கள் யாரும் பஸ்களை இயக்க வேண்டாம். அரசு மீண்டும் நம்மை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்“ என்றார்.

இயங்க தொடங்கியது
இதற்கிடையே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக லட்சுமண் சவதி அறிவித்ததை அடுத்து பெங்களூரு, பெலகாவி உள்பட பல்வேறு இடங்களில் பஸ்கள் இயங்க தொடங்கியது. ஆனால், அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க தலைவரின் அறிவிப்பை அடுத்து பஸ்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story