ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வு; 1,571 பேர் கலந்துகொள்ளவில்லை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2-ம் நிலை காவலர் பணிக்கான எழுத்து தேர்வில் ஆயிரத்து 571 பேர் கலந்து கொள்ளவில்லை.
விண்ணப்பம்
தமிழ்நாடு சீருடைபணியாளர் தேர்வாணையம் சார்பில் தமிழகத்தில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழகத்தில் 10 ஆயிரத்து 329 2-ம் நிலை காவலர் பணியிடங்களும், 110 சிறை காவலர் பணியிடங்களும், 458 தீயணைப்பாளர் பணியிடங்களும் மற்றும் கடந்த முறை நிரப்பப்படாத பணியிடங்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 813 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த தேர்விற்காக 13 ஆயிரத்து 205 ஆண்களும், 2 ஆயிரத்து 304 பெண்களும் என மொத்தம் 15 ஆயிரத்து 509 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதற்கான எழுத்து தேர்வுகள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றன. இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 13 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
11 மணிக்கு தொடங்கிய தேர்விற்கு நேற்று காலை 9 மணி முதலே தேர்வர்கள் அவரவர் தேர்வு மையங்களுக்கு வந்தனர். இவர்கள் அனைவரும் முதல்கட்டமாக காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா என வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் துருவி துருவி ஆண்பெண் போலீசாரால் பரிசோதனை செய்யப்பட்டு பேனா, நுழைவுச்சீட்டு தவிர எதையும் கொண்டுசெல்லாமல் உறுதி செய்து
தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்தபின்னரே அனுப்பப்பட்டனர். முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் முககவசம் வழங்கி அனுப்பி வைத்தனர்.
ஆய்வு
தேர்வு நடைபெற்ற மையங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து தேர்வு மையங்களிலும் நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக பதிவு செய்யப்பட்டன. தேர்வு மைய பகுதி முழுவதும் போலீசாரின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு இருந்தன. இந்த தேர்வில் 15 ஆயிரத்து 509 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் ஆயிரத்து 317 ஆண்களும், 254 பெண்களும் என மொத்தம் ஆயிரத்து 571 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. ராமநாதபுரம் செய்யதுஅம்மாள் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய சிலரின் புகைப்பட அளவு, பெயர் உள்ளிட்ட எழுத்துகளில் வேறுபாடு இருந்ததால் அவற்றை அந்த இடத்திலேயே சரிசெய்து அனைத்தும் சரிசெய்தபின்னரே அனைவரும் வெளியில்செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த தேர்வு மையத்தில் மட்டும் தேர்வர்கள் வெளியில் வர தாமதமானது.
Related Tags :
Next Story