சேலம் மகுடஞ்சாவடி அருகே விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை
சேலம் மகுடஞ்சாவடி அருகே உள்ள விருதுநகர் வட்டார போக்குவரத்து பெண் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இளம்பிள்ளை,
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும், வாகன சோதனை சாவடிகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது.
விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியபட்டி பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியின் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் ரூ.24 லட்சம் மற்றும் 117 பவுன் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் விடிய, விடிய கலைச்செல்வியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை செய்தனர்.
வீட்டில் சோதனை
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கலைச்செல்வியின் வீடு சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே சுண்டமேட்டூர் அண்ணாநகரில் உள்ளது. இந்த நிலையில், சேலம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தங்கமணி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சுண்டமேட்டூர் அண்ணாநகருக்கு நேற்று காலை வந்தனர். அங்கு கலைச்செல்விக்கு சொந்தமாக 2 வீடுகள் இருப்பது தெரியவந்தது. பிறகு அந்த 2 வீடுகளிலும் பணம் மற்றும் நகைகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? எனவும், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் இருக்கிறதா?, எனவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 4 மணி நேரம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று அங்கிருந்த அதிகாரிகள் சிலரிடமும் கலைச்செல்வி குறித்து விசாரித்து சென்றனர்.
Related Tags :
Next Story