வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 170 பேர் கைது


வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 170 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2020 2:16 AM GMT (Updated: 15 Dec 2020 2:16 AM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 170 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், இதற்காக டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை ஆதரித்தும் தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் இணைந்து காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

மத்திய அரசை கண்டித்து கோஷம்

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், ஒருங்கிணைப்பாளர் கலியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். இதில் விவசாய சங்கத்தினர் சிவராமன், தாண்டவராயன், சவுந்தர்ராஜன், மோகன்ராஜ், செண்பகவள்ளி, மாதவன், வேல்மாறன், துரை, குண்டுரெட்டியார், எழில்ராஜா, கோவிந்தசாமி, ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்ட வேளாண் சட்டங்களை கண்டித்தும், இந்த சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு கலைந்து செல்லுமாறும், காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி தர முடியாது என்றும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இருப்பினும் அவர்கள் அனைவரும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

170 பேர் கைது

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 பெண்கள் உள்பட 170 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேன்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story