கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 8:59 AM IST (Updated: 15 Dec 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பா.ம.க., வன்னியர் சங்கம் சார்பில் நேற்று கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் 356 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. கிட்டம்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு பா.ம.க. மாநில துணை பொதுசெயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை தாங்கினார்.

இதேபோல் கம்மம்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய செயலாளர் சென்றாயப்பன், துணை தலைவர் குமரவேல் ஆகியோர் தலைமை தாங்கினர். பா.ம.க. நிர்வாகிகள் சுப.குமார், மோகன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் காட்டிநாயனப்பள்ளி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு ஊராட்சி மன்ற துணை தலைவர் நாராயணக்குமார் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

மத்தூர்-தேன்கனிக்கோட்டை

மத்தூர் ஒன்றியத்தில் நாரல்லபள்ளி, சாமல்பட்டி, மத்தூர், மேட்டு சூலக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. சாமல்பட்டியில் பா.ம.க.வினர் ஊர்வலமாக சென்று கல்லாவி சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் செல்வத்திடம் மனுக்களை கொடுத்தனர். இதில் முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ரங்கசாமி, ராஜ்சங்கர், தொழில் அதிபர் வேலு, நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர் சந்திரன் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தேன்கனிக்கோட்டையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மலர்வண்ணன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதேபோல் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, இருதுகோட்டை ஆகிய கிராம நிர்வாக அலுவலர்களிடம் பா.ம.க.வினர் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

ஓசூர்

ஓசூர் சென்னத்தூர், ஜூஜூவாடி, பாகலூர், தொரப்பள்ளி அக்ரஹாரம், கொத்தகொண்டபள்ளி, அச்செட்டிபள்ளி, மூக்கண்டபள்ளி உள்பட பல்வேறு கிராம நிர்வாக அலுவலகங்களில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஓசூரில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில் சமூக நீதி பேரவையின் மாநில துணை செயலாளர் வக்கீல் கனல் கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் சூளகிரி தாலுகாவில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களிடமும் பா.ம.க.வினர் மனுக்களை வழங்கினர். காவேரிப்பட்டணம் ஒன்றியம் குடிமேனஅள்ளி, அகரம் ஆகிய ஊராட்சிகளில் பா.ம.க. சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

ராயக்கோட்டை

கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 கிராம நிர்வாக அலுவலகங்கள் முன்பு பா.ம.க. சார்பில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ராயக்கோட்டையில் நடந்த போராட்டத்திற்கு பா.ம.க. ஒன்றிய செயலாளர் முத்துகுமார் தலைமை தாங்கினார். முன்னதாக கட்சி நிர்வாகிகள் பா.ம.க .கொடி ஏந்தி ராயக்கோட்டை 4 ரோட்டில் உள்ள அண்ணா சிலையில் இருந்து கிராம நிர்வாக அலுவலகம் வரை கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாக வந்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பா.ம.க.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர். இதில் மாவட்ட அமைப்பு தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணை செயலாளர் காடு பெருமாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் விரும்மாண்டி, சந்தன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ஈஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு சரவணா உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story