கும்பகோணம் அருகே பயங்கரம்: தாயை வெட்டிக்கொன்று வாலிபர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


கும்பகோணம் அருகே பயங்கரம்: தாயை வெட்டிக்கொன்று வாலிபர் தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 Dec 2020 10:04 AM IST (Updated: 15 Dec 2020 10:04 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அருகே தாயை வெட்டிக்கொன்ற வாலிபர் தூக்குப்போட்டு தற்கொைல செய்து கொண்டார். அவர்களின் உடல்களை போலீசார் கைப்பற்றி இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கபிஸ்தலம், 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை, செருகுடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவருடைய மனைவி மலர்க்கொடி(வயது52). இவர்களது மகன்கள் ராதாகிருஷ்ணன்(35), ராஜசேகர்(30)், ராமநாதன்(25). சிவசுப்பிரமணியன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது வீட்டை விட்டு வெளியேறி மாயமாகி விட்டார். இவரது மூத்த மகன் ராதாகிருஷ்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இவர் அவ்வப்போது கட்டிட வேலைக்கும் சென்று வந்தார். ராஜசேகர், ராமநாதன் ஆகியோர் கும்பகோணத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்கள்.

வெட்டிக்கொலை

நேற்று இரவு வீட்டில் ஒரு அறையில் மலர்க்கொடியும் அவரது மூத்த மகன் ராதாகிருஷ்ணனும் தூங்கி கொண்டு இருந்தனர். மற்றொரு அறையில் ராஜசேகரும், அவரது தம்பி ராமநாதனும் தூங்கினர். நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் திடீரென கண் விழித்த ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தூங்கி கொண்டிருந்த தனது தாய் மலர்க்கொடியை சரமாரியாக முகத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் முகம் சிதைந்த மலர்க்கொடி சம்பவ இடத்திலேயே ரத்த ெவள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டில் இருந்த சேலையை எடுத்த ராதாகிருஷ்ணன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசுக்கு தகவல்

நேற்று அதிகாலை கண் வழித்த ராமநாதன் வீட்டில் தனது தாய் தூங்கி கொண்டிருந்த அறைக்கு சென்றார். அப்போது அறையில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததையும், தனது அண்ணன் தூக்கில் பிணமாக தொங்குவதையும் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே சம்பவ இடத்துக்கு திரண்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டில் தாய்- மகன் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சுவாமிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரணம் என்ன?

இதைத்தொடர்ந்து கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தாய்- மகன் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராதாகிருஷ்ணன் ஏன் தனது தாய் மலர்க்கொடியை வெட்டிக்கொன்று தற்கொலை செய்தார்? என்ற முதற்கட்ட தகவல் தெரியவில்லை.

இது குறித்து சுவாமிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மனநிலை பாதிப்பால் ராதாகிருஷ்ணன் தனது தாயை வெட்டிக்கொன்று தற்கொலை செய்தாரா? அல்லது இந்த கொைலக்கு வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். தாயை வெட்டிக்கொன்று மகன் தற்கொலை செய்த சம்பவம் சுவாமிமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story