சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தனியார் நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் 100 பேர் கைது


சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தனியார் நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் 100 பேர் கைது
x
தினத்தந்தி 15 Dec 2020 10:49 AM IST (Updated: 15 Dec 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தனியார் நிறுவனங்களை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் நிறுவனங்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சேலம் 5 ரோடு அருகே உள்ள தனியார் நிறுவனம் முன்பு நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் நாவரசன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் பிரவீன்குமார் தலைமையிலும் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

100 பேர் கைது

அப்போது சிலர் நிறுவனம் உள்ளே சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, போராட்டம் நடத்தியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கூட்டாக இணைந்து தனியார் நிறுவனம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், தனியார் நிறுவனம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகர செயலாளர் பொன்.ரமணி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர். அஸ்தம்பட்டி அருகே உள்ள தனியார் நிறுவனம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் பழனிசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாநகரில் நேற்று 3 இடங்களில் நடந்த தனியார் நிறுவனங்கள் முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இதனிடையே, அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் வேளாண் திருத்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், மின்சார சட்டத்தை திருத்தம் செய்யக்கூடாது, வேளாண் சட்டங்களை ஆதரிப்பதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்ததது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

Next Story