வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் கைது
வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சேலத்தில் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
சேலம்,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாகவும், புதிய வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் பல்வேறு விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் சார்பில் மத்திய, மாநில அரசு அலுவலங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சேலத்தில் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் வேலுசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் நேற்று ஜங்ஷனில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர்.
அப்போது ரெயில்நிலைய நுழைவுவாயில் பகுதியில் இருந்த மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், துணை கமிஷனர் செந்தில், உதவி கமிஷனர் நாகராஜன், ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து ரெயில் நிலையத்திற்குள் நுழைந்து ரெயில் மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரெயில் மறியலுக்கு முயன்ற விவசாய சங்கத்தினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். பின்னர் அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி அங்கு உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் புலிகள் கட்சி
இதனைத் தொடர்ந்து தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் உதய பிரகாஷ் தலைமையில் சுமார் 30 பேர் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு ஜங்சன் பகுதியில் ரயில் மறியல் செய்ய திரண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து தமிழ் புலிகள் கட்சியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story