‘‘டார்ச்லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கம் ஆவோம்’’ திண்டுக்கல்லில் கமல்ஹாசன் பேச்சு
டார்ச்லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கம் ஆவோம் என்று திண்டுக்கல்லில் நடந்த மக்கள் நீதிமய்யம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
திண்டுக்கல்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். இதையொட்டி வத்தலக்குண்டு, திண்டுக்கல் ஆர்.எம்.காலனி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்தார். அப்போது அந்த பகுதிகளில் திரண்டு இருந்த மக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். உடனே கமல்ஹாசன் திறந்த காரில் நின்றபடி மக்களை பார்த்து கைஅசைத்தார்.
இதையடுத்து திண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
நோய்வாய்பட்ட ஜனநாயகம்
இந்திய ஜனநாயகம் தற்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறது. அதனால் தான் என்னவோ நமது கட்சியில் டாக்டர்கள் அதிகமாக உள்ளனர். எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் போடும் ஊசி வித்தியாசமாக இருக்கும். அது நல்லவர்களுக்கு வலிக்காது, கயவர்களுக்கு வலிக்கும்.
மேலும் செல்லும் ஊர்களில் எல்லாம் ஊசி போட வேண்டியது உள்ளது. சிலருக்கு அது வலிக்கிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும். கடந்த 50 வருடங்களாக நமக்கு வலிக்க வில்லையா? 1799-ம் ஆண்டிலேயே துப்பாக்கி தயாரிக்க முடியும் என நிரூபித்த ஊர் திண்டுக்கல்.
மக்கள் நினைத்தால் கத்தியின்றி, ரத்தமின்றி, துப்பாக்கியின்றி புரட்சியை ஏற்படுத்த முடியும். அதன் புரட்சியின் கூர்முனையாக நான் இருக்க விரும்புகிறேன். உங்களின் கருவியாக நான் இருக்க விரும்புகிறேன்.
கலங்கரை விளக்கம்
நமக்கு டார்ச்லைட் சின்னம், தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. தடைகளை வென்று சரித்திரம் படைப்போம். டார்ச்லைட் இல்லை என்றால் கலங்கரை விளக்கம் ஆவோம். எங்களுடைய சாதாரண ரூபத்தை விஸ்வரூபம் ஆக்குவது இவர்கள்தான். நாம் ஆட்சியில் அமர்ந்தால், மக்கள் தைரியமாக கேள்வி கேட்க உரிமை வழங்கும் தைரியமும், தன்னம்பிக்கையும் நமது கட்சிக்கு உண்டு. ஆட்சியில் பல மாற்றங்களை செய்ய காத்து இருக்கிறோம்.
அதற்கு வெகுநாட்கள் காத்திருக்க வைக்க மாட்டீர்கள் என்பதற்கான சாட்சிகளும் தெரிகிறது. சமுதாயத்தில் எதிரிகளோடு தான் நமக்கு போட்டியே தவிர, சகோதரர்களுடன் அல்ல. எதிரெதிர் சித்தாந்தம் கொண்டவர்கள் எதிரிகள் அல்ல. எல்லோரும் நாட்டுக்காக தான் உழைக்கிறோம். ஆனால், ஏளனம் செயதால் பார்த்து ெகாண்டிருக்க மாட்டோம். எங்களின் பதிலடி வலிக்க தான் செய்யும்.
நல்லவர்கள் இருப்பது தெரிந்தும்
நமது வெற்றிக்கான பாதை கண் முன் தெரிகிறது. எனவே, பராக்கு பார்த்து ்கொண்டு பாதையை விட்டுவிடாதீர்கள். மக்களிடம் கொள்ளையடித்த பணத்தை கொண்டு தர்மவான் போன்று, தேர்தலில் மக்களிடமே ரூ.5 ஆயிரம் கொடுக்கிறார்கள். மக்களை, அவர்களிடமே விற்கிறார்கள். நல்ல அரசு அமைந்தால் தேர்தலுக்கு பின்னர் அந்த ரூ.5 ஆயிரம், ரூ.5 லட்சமாகவோ அல்லது ரூ.50 லட்சமாகவோ மாறும். அதை புரிந்து கொண்டால் தேர்தலில் காசு வாங்க மாட்டார்கள்.
நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும். அவ்வாறு தெரிந்தும், கொள்ளையர்கள் கையில் ஆட்சியை கொடுக்கிறார்கள். அதற்கு தேர்தல் நேரத்தில் மக்களை திசை திருப்புவதே காரணம். ஆனால், நேர்மை மட்டுமே எங்களின் முதலீடு, தேர்தல் யுக்தி ஆகும்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.
இசைக்கலைஞர்கள் கைகலப்பு
இந்த கூட்டம் முடந்ததும் கமல்ஹாசன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். அவரை நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாகமாக அனுப்பி வைத்தனர். அப்போது பேண்டு இசைக்கலைஞர்கள் போட்டிபோட்டு கொண்டு இசைத்தனர். அந்த போட்டி திடீரென பிரச்சினையாக மாறி கைகலப்பானது. உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story