கர்நாடக மேல்-சபையில் மோதல்: பா.ஜனதாவினர் நடத்தியது ஜனநாயக படுகொலை; சித்தராமையா குற்றச்சாட்டு
கர்நாடக மேல்-சபையில் மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பா.ஜனதாவினர் நடத்தியது ஜனநாயக படுகொலை என்று சித்தராமையா கூறினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மேல்-சபையில் நடந்த கலாட்டா குறித்து பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நிராகரித்துவிட்டார்
கர்நாடக மேல்-சபை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான கடிதத்தை அவரிடம் பா.ஜனதாவினர் கொடுத்துள்ளனர். அந்த கடிதம் சட்டப்படி சரியாக இல்லை என்று கூறி அதை மேலவை தலைவர் நிராகரித்துவிட்டார். அதனால் கடந்த 10-ந் தேதி சபையை மேலவை தலைவர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இப்போது சபையை கூட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.
அதன்படி சபை இன்று (நேற்று) கூட்டப்பட்டது. காலை 11 மணிக்கு சபை கூடுவதற்கு முன்பு மணி ஒலிக்கப்படுகிறது. அந்த மணி ஒலிக்கப்பட்டு இருக்கும்போதே மேலவை தலைவர் இருக்கையில் துணைத்தலைவரை பா.ஜனதாவினர் உட்கார வைத்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு பா.ஜனதாவினர் கேட்டனர். மேலவை தலைவர் உள்ளே வர முடியாதபடி அவர் வரும் வழியில் உள்ள கதவை பா.ஜனதாவினர் மூடி பூட்டிவிட்டனர்.
குண்டர் மனப்பான்மை
இது பா.ஜனதாவினரின் குண்டர் மனப்பான்மையை காட்டுகிறது. பா.ஜனதாவினர் நடத்தியது, ஜனநாயக படுகொலை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். சபை விதிகளின்படி, மேலவை தலைவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டாலோ அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தாலோ, துணைத்தலைவரை சபையை நடத்தும்படி அவர் கூறுவார். துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் மேலவை தலைவர் இருக்கை பகுதிக்கு செல்கிறார். சட்டத்துறை மந்திரி மாதுசாமி, சபை காவலர்களை மிரட்டுகிறார்.
சபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. ஆயினும், துணைத்தலைவரை மேலவை இருக்கையில் உட்கார வைக்க பா.ஜனதா உறுப்பினர்கள் முயற்சி செய்துள்ளனர். இது தான் அரசியல் சாசனத்திற்கு மரியாதை கொடுக்கும் நிலையா?. கர்நாடக மேல்-சபையில் இதுபோல் எப்போதும் நடந்தது இல்லை. குண்டர்களை போல் பா.ஜனதா உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளனர். சபை தலைவர் வரும் வழியில் இருந்த கதவுகளை பா.ஜனதாவினர் இழுத்து மூடியது பெரிய குற்றம் ஆகும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story