தச்சு தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை


தச்சு தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Dec 2020 8:37 AM IST (Updated: 16 Dec 2020 8:37 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தச்சு தொழிலாளி குடும்பத்தோடு தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே வி.புதுப்பாளையத்தை சேர்ந்த மோகன் கடன் பிரச்சினை காரணமாக கடந்த 13-ந் தேதி இரவு தன்னுடைய மகள்கள் ராஜஸ்ரீ, நித்யஸ்ரீ, மகன் சிவபாலன் ஆகிய 3 குழந்தைகளையும் கொன்றுவிட்டு மனைவி விமலேஸ்வரியுடன் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெஞ்சை பத, பதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மோகன் கடன் பிரச்சினை காரணமாகத்தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கந்துவட்டி பிரச்சினை மற்றும் ஆன்லைன் சூதாட்டம் காரணமாக இருக்குமா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரேத பரிசோதனை முடிவு

தற்கொலை செய்துகொண்ட தச்சு தொழிலாளி மோகன் குடும்பத்தினரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை கிடைக்கப்பெற்றது. இதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ஆனால் குழந்தைகள் 3 பேரையும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்க விட்டு கொல்வது என்பது சிரமமான விஷயம் என்பதால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவில் ஏதேனும் விஷம் கலந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆனால் வாசனை ஏதும் வராததால் பிரேத பரிசோதனை அறிக்கையில் துல்லியமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் சம்பவத்தன்று இரவு மோகன், ஓட்டலில் இருந்து நூடுல்ஸ், பிரைட் ரைஸ் போன்ற உணவு வகைகளை வாங்கி வந்து சாப்பிட்டுள்ளனர். அதற்காக ரூ.620 செலவு செய்துள்ள ரசீது, வீட்டில் இருந்துள்ளது. மேலும் மோகன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு புத்தகத்தில் ரூ.13 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளதாக எழுதி வைத்துள்ளார். ஆனால் யார், யாரிடம் இருந்து எவ்வளவு தொகை கடன் வாங்கியுள்ளார் என்று அவர் குறிப்பிடவில்லை. காரணம் அவருக்கு தமிழில் எழுத, படிக்க தெரியாது, கணக்கு விவரங்களை மட்டும் எழுத தெரிந்திருக்கிறது.

ஜோதிடம் பார்த்துள்ளார்

அவர் 3 வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் என்பதால் ஏதேனும் வங்கியில் கடன் வாங்கியிருக்கலாம் என்று கருதுகிறோம், அதுபோல் தனியார் நிதி நிறுவனம் மற்றும் தனிநபர்களிடம் இருந்தும் கடன் வாங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர், கணக்கு வைத்துள்ள 3 வங்கிகளின் கடந்த ஓராண்டு கால கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து கேட்டுள்ளோம். அது கிடைத்ததும் வங்கிகளில் எவ்வளவு தொகை கடன் பெற்றுள்ளார் என்ற விவரம் தெரியவரும். ஆனால் கந்துவட்டி பிரச்சினை, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக அவரது குடும்பத்தினர், உறவினர்களிடம் இருந்து யாரும் புகார் தெரிவிக்கவில்லை. வாங்கிய கடனை திருப்பி கட்ட முடியவில்லை என்ற வேதனை ஒருபக்கம், கடந்த 10 மாதங்களாக வேலையின்றி போதிய வருமானமில்லாத வேதனையால் தற்கொலை செய்திருக்கலாம். மேலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மோகன் தனது குடும்பத்தோடு ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜோதிடம் பார்த்துள்ளார். அந்த ஜோதிடர் யார் என்ற விவரங்களை சேகரித்து வருவதோடு அவரை தேடி வருகிறோம். அவரை கண்டுபிடித்து விசாரித்தால் மோகன் குடும்பத்தின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story