கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை; 122 பேர் கைது
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 122 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி,
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாவட்ட தலைவர் ரகுராமன், தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் ஆனந்தன், விவசாயிகள் சங்க வட்ட செயலாளர் சாந்தமூர்த்தி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் வாக்குவாதம்
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தின் கதவை மூடினார்கள். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் தலைமையிலான போலீசார்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினார்கள். ஆனால் கலைந்து செல்ல மறுத்த அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு, முள்ளும், கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்று கலெக்டர் அலுவலகம் எதிரே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் கோஷம் எழுப்பினர்.
122 பேர் கைது
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்மணி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் உள்பட 122 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.
Related Tags :
Next Story