இலங்கை கடற்படை கைது செய்த 29 மீனவர்களை விடுவிக்க கோரி, ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகள் வேலைநிறுத்தம்; உறவினர்கள் போராட்டம்
இலங்கை கடற்படை கைது செய்த 29 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேசுவரத்தில் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
29 மீனவர்கள் கைது
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 14-ந் தேதி மீன்பிடிக்கச் சென்ற 4 விசைப்படகுகள், 29 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அதில் 22 பேர் இலங்கையில் காங்கேசன்துறை கடற்படை முகாமிலும், மற்ற 7 பேர் தலைமன்னார் கடற்படை முகாமிலும் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இலங்கை கடற்படை கைது செய்த 29 மீனவர்களையும், 4 படகுகளையும் விடுவிக்க மத்திய-மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று முதல் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த போராட்டத்தில் சிறிய விசைப்படகுகள் கலந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று காலை வழக்கம்போல் மீன்பிடிக்கச் செல்வதற்காக சிறிய விசைப்படகு
மீனவர்கள் மீன்வளத் துறை அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருந்தனர்.
கோஷமிட்டனர்
அப்போது சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், எந்த படகுக்கும் மீன்பிடிக்க அனுமதி வழங்கக்கூடாது எனக்கூறி அலுவலகம் முன்பு நின்று கோஷம் எழுப்பினார்கள். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சிறிய விசைப்படகுகள் மீன்பிடி அனுமதிச்சீட்டு பெற்று வழக்கம்போல் மீன்பிடிக்க சென்றன. நேற்று மாலை வரையிலும் 58 படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச்சென்றிருந்தன.
முற்றுகை போராட்டம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி அந்த மீனவர்களின் குடும்பத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் ராமேசுவரம் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.
2 நாட்களுக்குள் மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் மற்ற படகுகளையும் மீன்பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story