திருவண்ணாமலை அருகே கிணற்றை சீரமைத்து, வர்ணம் பூசி அழகுபடுத்திய இளைஞர்கள்; கமல்ஹாசன் பாராட்டு
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டு பழையனூர் ஊராட்சியில் துருவம் கிராமம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு ஊராட்சிக்கு சொந்தமான பழமையான குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றை சரியான முறையில் பராமரிக்காததால் சேதம் ஏற்பட்டு இருந்தது. கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் கிணற்றை தூர்வாரி, சுத்தம் செய்து, சேதமான பகுதிகளை சீரமைத்து, வர்ணம் பூசி, கிணற்றை சுற்றிலும் அழகான பறவைகள் மற்றும் பல்வேறு ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர்.
இதனால் அந்த கிணறு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இதை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் இந்தக் கிணறு சீரமைக்கப்பட்டதை அறிந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நம்பிக்கை நட்சத்திரங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story