இந்திய கம்யூனிஸ்டு கட்சியினருடன் அமைதி பேச்சுவார்த்தை
நிர்வாக சீர்கேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வருகிற 22-ந் தேதி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா பெரிய கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் நிர்வாக சீர்கேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வருகிற 22-ந் தேதி ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக துண்டு பிரசுரம் வினியோகித்தனர். இதையறிந்த ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி, பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் சுமூக நிலை ஏற்பட அமைதி பேச்சுவார்த்தைக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை அழைத்தார். இதையடுத்து அவர் தலைமையிலும், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன், அமிர்தலிங்கம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், ஆண்டிமடம் வருவாய் அலுவலர் வாசுதேவன், பெரிய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது, ஊழல் நடைபெற்றதாக கூறிய நபர்களின் பெயர் பட்டியல் வழங்குமாறும், மோசடி செய்யப்பட்ட பெயர் பட்டியலை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருதரப்பினர் இடையே உள்ள வழக்குகளை முடிவுக்கு கொண்டுவர பேசி முடிவு எடுக்க தெரிவிக்கப்பட்டது. ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு வருவதாக தெரிவிக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை செய்து விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு அமைப்பாளர் கவர்னர், ஒன்றிய செயலாளர் ராமநாதன், தமயந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story